பதிவு செய்த நாள்
15
மார்
2011
05:03
எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் தகுதி எனக்கில்லை. எனக்கு வார்த்தைகளும் வரவில்லை. நான் செய்த பாவத்தின் பலனாக, தங்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும் துர்பாக்கியவான் ஆனேன், என்றவன், அவளது திருவடியை வணங்கிவிட்டு, கங்கையைக் கடந்து அயோத்திக்கு விரைந்தான். அவனது தேர் மறைந்தது கண்டு, சீதை கதறினாள். ஐயோ! எனக்கு இதற்கு முன் காட்டில் பாதுகாப்பாக இருந்த இந்த இளையவனும் போய்விட்டானே! நான் பாதுகாப்பற்ற பதுமை ஆகிவிட்டேனே, என அரற்றினாள். ஏ விதியே! இலங்கையில் கொடிய ராவணனின் சிறையில் அடைபட்டுக் கிடந்தது போதாதென்று, இப்போது பெரும்பழியை என் மீது சுமத்தி, இங்கே கொண்டு வந்து சேர்த்தாயோ? இந்த துயரத்திற்கு என்று தான் விடிவு? இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு யாரையும் தொடமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்த ராமனே, என் மீது களங்கம் சுமத்தி கானகத்தில் விடச் செய்தாயே! இன்னும் ஏதாவது செய்ய பாக்கி வைத்திருக்கிறாயா? தேவர்களாலும் உன்னை வெல்ல இயலாது என்பதை நானறிவேன். ஆனாலும், மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.
சீதாவின் மனதில் பல எண்ணங்கள் ஓடின. பெண்ணாகப் பிறந்தவளை கணவன் கைவிட்டு, பிறந்த வீட்டுப்பக்கம் போனால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உறவினர் வீடுகளுக்குச் சென்றால் என்ன தப்பு செய்தாய்? எனக் கேட்டு பழி போடுவார்கள். ஒரு கட்டத்தில் அவள், இப்படி பழியுடன் வாழ்வதை விட, என் உயிர் போகட்டும், எனக் கதறினாள். அந்த சமயத்தில் வால்மீகி முனிவரின் சீடர்கள் சிலர் அங்கே வந்தனர். ஒரு பெண் தனிமையில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இரக்கம் கொண்டனர். அவர்கள் உடனடியாக குருவிடம் சென்று, குருவே! தேவலோகப் பெண்ணா, பூலோகப்பெண்ணா என்று கணிக்க முடியாத அளவிற்கு பேரழகு கொண்ட ஒரு பெண்மணி, நம் கானகத்திற்கு வந்திருக்கிறாள். அவள் அழுது கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். தாங்கள் தான் அவளுக்கு உதவி செய்ய வேண்டும், என்றனர். வால்மீகி அவர்களுடன் அவசரமாக அவள் நின்ற இடத்திற்குச் சென்றார். பெண்ணே! அழுவதால் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. மனத்துயரை விடு. அம்மா! நீ யார் என்பதை நான் அறிவேன். நீ சீதாதேவி. ராம பத்தினி, தூய்மையான கற்புநெறியுடையவள், ஜனகபுத்திரி. இதையெல்லாம், யோக சமாதியில் இருந்து உணர்ந்து கொண்டேன். உன் கணவன் உன்னைக் காட்டில் விடவில்லை. நீ என்னுடன் தங்கியிருக்க வேண்டுமென நினைத்து இங்கே விட்டிருக்கிறான் என நினைத்துக் கொள். நான் தங்கியுள்ள ஆஸ்ரமத்திற்கு வா, என்றார். அவர் மேலும், அழகு மங்கையே! எங்கள் ஆஸ்ரமத்தில் பல பெண்கள் தவ வேடம் பூண்டு அரிய தவம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் உன்னைப் பார்த்தால் அளவற்ற ஆனந்தமடைவார்கள். உனக்கு பாதுகாப்பும் கிடைக்கும். கவலையை விடுத்து வா, என்றார்.
வால்மீகி முனிவர் சொன்னதைக் கேட்ட சீதை, அவரது இணையடியில் வீழ்ந்த வணங்கி, அவருடன் கிளம்பி விட்டாள். ஆஸ்ரமத்திற்கு சென்றதுமே, அங்கிருந்த பெண்கள் அவளைப் பார்த்து, இப்படியும் ஒரு பேரழகியா? என வியந்தனர். ஏழையாக இருந்தவன் ஒரே நாளில் பணக்காரன் ஆனது போல், திருமகளே நம் ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறாளோ, ஒருவேளை தேவர்களால் சபிக்கப்பட்ட தேவலோக பெண்ணான இவள், ஏதோ ஒரு சாபத்தால் பூமியில் விழுந்து விட்டாளோ என பெருமை பொங்க பேசினார்கள். அத்துடன், அவளது முகத்தில் ஏதோ ஒரு வேதனை ரேகை ஓடுகிறது என்பதையும் அவளது முகக்குறிப்பால் உணர்ந்து கொண்டனர். அப்போது வால்மீகி அவர்களிடம், குழந்தைகளே! இவளது சரிதத்தைக் கேளுங்கள். இவள் கடல்சூழ்ந்த இலங்கையை அழித்த ராமனின் மனைவி. எந்த நிலையிலும் யார் மீதும் கோபப்படாத மிதிலை மன்னன் ஜனகனின் புத்திரி. இவளது பெயர் சீதா. இவளது கணவன் இவளை ஒதுக்கி வைத்து விட்டான். அதன் காரணமாக இங்கு வந்திருக்கிறாள். இவளுக்கு இவள் அனுசரணையாக இருங்கள், என்றாள். அந்த மங்கையர் அவளைத் தேற்றி, பரிவுடன் ஒரு குடிலுக்குள் அழைத்துச் சென்றனர். இந்நேரத்தில் லட்சுமணனும், அமைச்சர் சுமந்திரரும் அயோத்தியை அடைந்திருந்தனர். ராமனைச் சந்தித்த லட்சுமணன், அண்ணா! தாங்கள் சொன்னபடியே அண்ணியாரை கானகத்தில் விட்டேன். விதி யாரை விட்டது? இந்த உலகத்தார் பழிசொன்னார்களே என்பதற்காக, தாங்கள் அண்ணியாரைப் பிரிந்தீர்கள். இதற்காக, அந்த உலகத்தை நொந்து பயனில்லை. அண்ணியாரைப் போன்ற குணவதி பூமியில் யாருமில்லை. இருப்பினும், அவருடன் வாழக் கொடுத்து வைக்காத தாங்கள் விதியைத் தவிர வேறெதையும் நொந்து கொள்ள வேண்டாம், என்றான். காட்டில் இருந்த சீதை கர்ப்பஸ்திரீ என்பதால், அவளை தவமங்கையர் பொறுப்புடன் கவனித்துக் கொண்டனர். ஒருநாள் இரவில், சீதாதேவிக்கு பிரசவ அறிகுறி ஏற்பட்டது. தவமங்கையர் மிக்க கவனத்துடன் பேறுகாலம் பார்த்தனர். அவளுக்கு செந்தாமரைக் கண்களுடனும், செவ்வாயும் கொண்ட இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இரட்டைக்குழந்தைகள் பிறந்தது கேட்டு, வால்மீகி மகிழ்ந்தார். சீதாவை சென்று பார்த்து ஆசிர்வாதம் செய்தார். குழந்தைகளின் அழகை ரசித்தார். மைவண்ணனாகிய ராமன், எத்தகைய சர்வ லட்சணங்களும் பொருந்தியவனோ அதுபோன்றே குழந்தைகளும் மிகுந்த அழகுடன் திகழ்ந்தனர்.