பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
வெண்மை நிறம் கொண்ட, குழாய் போன்ற வடிவமுடைய, ஆறு சிறு இதழ்கள் கொண்ட மலர் நில சம்பங்கி. இந்த மலரைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. மலர்ச் சந்தைகளிலும், சிறிய பூக்கடைகளிலும் எளிமையாக இடம்பெற்றிருக்கும் மலர். ஓ-பாசிடிவ் வகை ரத்தம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது என்பதால், அதனை யுனிவர்சல் என்றழைப்பார்கள்! அதுபோல இந்த மலரும் யுனிவர்சல் வகையைச் சேர்ந்ததுதான்.
மலர்கள் கொண்டுதான் இறைவனை அர்ச்சிக்க வேண்டுமா என்றால், சாதாரண மக்களுக்கு இது அவசியம். ஞானிகளுக்கு இறைவனை நினைத்திட எந்த இடைப்பொருளும் அவசியமில்லை. மகான் விட்டோபா... தன்னிலை மறந்து எதிலோ லயித்திருந்தார். அவருடைய ஒரு பாதம் சிவலிங்கத்தின் மீது பட்டுக் கொண்டிருந்தது. அதனை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரைத் தரிசிக்க வந்த நாமதேவர், இந்தக் காட்சியைக் கண்டார். பதறிப் போனார். உரிமையுடன் விட்டோபாவைக் கோபித்துக் கொண்டார். விட்டோபா, எனக்கு, களைப்பாக இருக்கிறது. என் உடலை இம்மியளவும் அசைக்க இயலவில்லை. எனவே, நீயே என் கால்களைத் தூக்கி சிவலிங்கத்தின் மீது படாதவாறு வைத்துவிடேன் என்றார். நாமதேவரும், விட்டோபாவின் காலைத் தூக்கி சற்று நகர்த்தி வைத்தார். என்ன அதிசயம்! விட்டோபாவின் காலைத் தொட்டுக்கொண்டு ஒரு சிவலிங்கம் உருவாகி இருந்தது. நாமதேவர் மீண்டும் விட்டோபாவின் கால்களை நகர்த்தி வைத்தார். அங்கும் சிவலிங்கம் உதித்தது. நாமதேவருக்கு இதென்ன விளையாட்டு என்று புரியவில்லை, விட்டோபாவின் கால்களை எங்கு வைத்தாலும் அங்கெல்லாம் சிவலிங்கம் தோன்றியது. இது எதனைத் தெளிவாக்குகிறது என்றால், நாம் எத்தனையோ மலர்களால் அர்ச்சித்தாலும், பகவானுக்குத் தன் பக்தனின் பாத மலர்களில்தான் அதிக ரசமிருக்கிறது என்பதைத்தான்! இது ரமணர் மகிழ்ந்து சொல்லும் அற்புதம் என்று படித்தது நினைவிருக்கிறது. பக்தனின் பாத மலருக்கு அவ்வளவு சிறப்பு!
அப்படி நம்மால் ஆகிவிட முடியுமா என்ன? இறைவனிடம் உள்ள பக்தியை இறைவனுக்கே தெரியப்படுத்துவதற்காக பூக்களை ஒரு சாதனமாக, தூதுவனாகப் பயன்படுத்துகிறோம். எத்தனையோ வண்ணங்களில் மலர்களை அவனது பாதார விந்தங்களுக்கு நாம் சமர்ப்பித்தாலும், ஒரு நாள், ஒரே ஒரு நாள் இன்று வெண்மலரால் மட்டுமே இறைவனை பூஜிக்கப் போகிறேன் என்று தீர்மானித்துக்கொண்டு எளிதில் கிடைக்கும் வெண் சம்பங்கி... அதுதான் நிலசம்பங்கி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தோ அலங்காரம் செய்தோ பாருங்கள். பூஜை முடிந்த பிறகும், போகும் போதும் வரும்போதும் உங்கள் பார்வையை வெண்மலர் நிறைந்த இறைவனின் மீது செலுத்திப் பாருங்கள். அன்றையதினம் உங்களை அறியாமல் மனதில் அமைதி குடி கொண்டிருக்கும். எந்தச் சூழலையும் சாந்தமாகச் சமாளிப்பீர்கள். இது எப்படிச் சாத்தியமாகும் என்கிற ஐயம் தவிர்த்து விடுங்கள். புஷ்பங்கள் நான்கு வகைப்படும் என்று முன்பே சொன்ன நினைவிருக்கிறது. அவற்றுக்கும் குணங்கள் உண்டு. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை இறைவனுடன் சேர்த்து தரிசிக்கும்போது, அதன் சாத்வீகம் உங்களுக்குள்ளும் வந்துவிடும்.
இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் அதன் மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை. இந்த வாசனையின் காரணமாக, இந்த மலர் உலகளாவிய அளவில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. சென்ட், அத்தர் தயாரிப்புத் தொழிற்சாலைகளின் மிக நெருங்கிய நண்பன் இந்த மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயின் வர்த்தக வரவேற்பு அமோகமானது.
இரவின் சுகந்தம் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டுள்ள இந்த மலர் மெக்ஸிகோ நாட்டின் வியாபார மலர். அந்த நாடுதான் நில சம்பங்கி மலரின் பிறப்பிடம் என்கிறார்கள். அதுவும் நார்டோ எனும் இடத்தில் நில சம்பங்கியின் பூமி என்று சொல்லும் அளவுக்கு இந்த மலர் விளைவிக்கப்பட்டதாம். மெக்ஸிகோவில் மட்டும் நில சம்பங்கியில் பதிமூன்று வகையான மலர்கள் உண்டாம். அவை வெண்மை, இளஞ்சிவப்பு. ஆழ்ந்த சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் இருக்குமாம். 1,600 ஆம் ஆண்டுகளில் வெண்மை நிறம் கொண்ட சம்பங்கிப் பூக்களின் அழகினால் கவரப்பட்டு ஸ்பெயின் தேசத்தில் சம்பங்கி விளைச்சல் அங்குமிங்குமாய் ஆரம்பிக்கப்பட்டு ஐரோப்பா முழுதும் இதன் நறுமணத்துக்காகவும், அதனின்று பெறப்படும் வாசனை எண்ணெய்க்காகவும் விளைவிக்கப்பட்டது.
நாளடைவில் இந்த மலர்களுடன் மக்களின் வாழ்க்கையும் ஒன்றிப்போனது. சந்தோஷமான விழாக்களுக்கும், இறப்பின் போதும் சம்பங்கி மலர்களை தங்களின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். பூங்கொத்துக்களில் இந்தப் பூ நீண்ட அதன் தண்டுடன் இடம்பெறுவதை இறைவனின் ஆசீர்வாதம் என்று கருதினார்கள். தற்செயலாக, எதிர்பாராத நேரத்தில் சம்பங்கி மலர்கள் நிறைந்த ஒரே ஒரு தண்டினையோ பூங்கொத்தையோ யாராவது வந்து கொடுத்தால் பெற்றுக் கொண்டவர்கள், அன்று தங்களுக்கு நல்ல நேரம், நல்ல செய்தி வரப்போகிறது, இறையருள் கிடைக்கப்போகிறது... என்றெல்லாம் கருத ஆரம்பித்தார்கள். இன்றும் இந்த மலர்கள் மக்களிடையே மனரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
வெள்ளை சம்பங்கி மலர்களின் வாசனை மர்மமாகவும் ரம்யமாகவும் இருக்கும். இதிலிருந்து பெறப்படும் தேனுக்கு அலாதியான மணம் உண்டு. அதன் கராணமாக பற்பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவிய உலகில் கொடிகட்டிப் பறக்கும் மலராகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக, ஃபிரான்சு தேசத்தின் தென்பகுதியில் இதற்கான தொழிற்கூடம் பழங்காலந்தொட்டே இயங்கி வருவதாகத் தெரிகிறது.
ஹவாய், இந்தோனேசிய திருமணங்களில் மணமக்கள் சம்பங்கி மாலை அணிவது கட்டாய வழக்கமாக உள்ளது. இந்தியத் திருமணங்களில், குறிப்பாக வடஇந்தியத் திருமணங்களில் வெள்ளை சம்பங்கி மாலையை நாம் கட்டுவது போலல்லாமல், ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகத் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம். இதைவிட மேடை அலங்காரங்கள், மண்டப அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இது.
இந்தப் பூக்களின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், 16, 17, 18ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள், தத்துவஞானிகள் போன்ற பெரிய மனிதர்களின் தோட்டக்கலை ஆர்வத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்போதைய காலகட்டங்களில் வெண் சம்பங்கி மலர்களைத் தங்களது தோட்டப்பயிராக வளர்ப்பது சமூக அந்தஸ்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது.
வெண்சம்பங்கி மலர்கள் மெக்ஸிகோ நகரத்துப் பூ என்று சொன்னார்கள். நீண்ட பசுமையான தண்டுகளையும், கூரானகத்தி போன்ற இலைகளையும் கொண்ட இந்த மலர், ஒவ்வொரு கணுவிலும் ஒரு பூவாகவும் இரு பூக்களாகவும் இரு வகையாக இருப்பதால், இதனை மெக்ஸிகன் சிங்கள்; மெக்ஸிகன் டபுள் என்றழைக்கிறார்கள், மெக்ஸிகன் டபுள்-க்கு கிராக்கி அதிகம்.
வெண் சம்பங்கி மலர்களை இந்திய வழித்தோன்றல் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை கைலாய மலையின் பனித்தூறல் என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
இந்த மலர்மாலை அனைத்து கோயில்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும் போது, வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் இது.
இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான மலர் இது என்றாலும் மிகையில்லை. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் இம்மலர்களுக்கு, நெஞ்சம் குளிரும் விதத்தில் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்திக்காரர்கள் ரஜினிகந்தா என்றும், கன்னடக்காரர்கள் சுகந்த ராஜா என்றும், தெலுங்கர்கள் நெல செம்பங்கி என்றும், மராத்திகாரர்கள் குல்செர்ரி என்றும், உருது மொழி பேசுபவர்கள் குல்ஷெப்போ என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர் என்கிறது ஒரு விவசாயக் கட்டுரை. இரவு ராணி என்று, நம் விவசாயிகள் இந்தப் பூவுடன் நெருக்கம் காட்டுகிறார்கள். நல்ல சந்தைப் பொருள் இந்த மலர். ஆகையால் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது. பெரும்பாலும் வாசனை எண்ணெய்க்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த மலர். ஆயிரம் கிலோ எடையுள்ள மலரிலிருந்து ஒரே ஒரு கிலோ, அதிமயக்கம் தரும் தூய வாசனை எண்ணெய் தயாரிக்கிறார்கள்.
வெண்மலர்கள் மிகவும் பிடித்த சிவபெருமானுக்கு, அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும். நிச்சலனமற்ற மனம் கைகூடும். உங்களைச் சுற்றி எது நடந்தாலும் பதற்ற மடையாமல், கலவரப்படாமல், நிதான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். நில சம்பங்கிப் பூக்களை புதிய சிருஷ்டி என்று வர்ணிக்கும் அரவிந்த அன்னை, மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன என்கிறார். நில சம்பங்கி மலர்களைக் கை நிறைய அள்ளி இறைவனின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, இனி பச்சைபசேல் இலைகள் என்றாலும் வண்ணப் பூக்களுக்கும் மேலான ஆன்மீக சிறப்புக்கள் கொண்டதும், நம் இல்லந்தோறும் குடியிருப்பவளுமான துளசியம்மாவுடன் பேசுவோம்.