அரசு ஒத்துழைப்புடன் குன்றத்தில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும் காமாட்சிபுரி ஆதீனம்
பதிவு செய்த நாள்
08
டிச 2025 12:12
பல்லடம்; திருப்பரங்குன்றத்தில், அரசின் ஒத்துழைப்புடன் அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு கோட்பாடு உண்டு. அவரவர் தெய்வ வழிபாட்டு முறைகளை அவரவர்கள் கடைபிடித்து வருகின்றனர். எல்லா மதமும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. அவ்வாறு, ஹிந்து மதத்தினருக்கு தமிழ் கடவுளாக விளங்கி வரும் முருகப்பெருமான், வேலுண்டு வினையில்லை என்ற சொல்லுக்கு ஏற்ப, பக்தர்களுக்கு ஏற்படும் வினைகளை நீக்கி வருகிறார். இதன்படி, ஆறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். பலரும் பல்வேறு தெய்வங்களை வழிபடுவது போல், முருகப்பெருமானுக்கு என, பக்தர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள், அவர்களின் மத வழிமுறையின்படி, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நினைக்கின்றனர். இப்போது தீபம் ஏற்றி விட்டால், ஒரு ஆண்டுக்கு பிறகே மீண்டும் வரப் போகின்றனர். எனவே, அமைதியாக அங்கு தீபம் ஏற்ற விட்டிருந்தால், யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு, பக்தர்கள் மனு கொடுத்து, நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் அதை செயல்படுத்த முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வேல் என்பது இன்று மட்டுமல்ல, புராண காலத்திலேயே பிரச்னைக்குறியதுதான். கடவுளுக்கே எத்தனையோ பிரச்னைகள் எழுந்ததாக புராணங்களில் படித்துள்ளோம். அந்த கடவுள்களும் கூட அசுரர்களுடன் போர் நடத்திதான் வெற்றி கண்டனர். அதுபோலவே இன்றும் நடந்து வருவதால், நாமும் போராடித்தான் இதில் வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவருக்கு பிரச்னை என்றால், அவரது தாய் தந்தையிடம் செல்வார்கள். நமக்கெல்லாம் தாய் தந்தையாக உள்ள முருகப்பெருமானுக்கே பிரச்னை என்றால், எங்கு செல்வது. இறைவன் அருளால், எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லையோ, அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். மேலும், அரசின் ஒத்துழைப்புடன், வெகு விரைவில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த நாள் சிறப்பான நாளாக எல்லோராலும் கொண்டாடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
|