பதிவு செய்த நாள்
11
நவ
2014
12:11
பாண்டவர்கள் திரவுபதியை மணந்து கொண்டு வாழ்வதை அறிந்த திருதராஷ்டிரன், காண்டவபிரஸ்தம் என்னும் நிலப்பரப்பை அளித்து சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்தான்.உண்மையில் காண்டவபிரஸ்தம் ஒரு களர்நிலம். அங்கே நாட்டை உருவாக்குவது என்பது அசாத்தியமானது. ஆனால், கிருஷ்ணனின் உதவியுடன், மயன், விஸ்வகர்மா ஆகியவர்களையும் சேர்த்துக் கொண்டு இந்திரலோகத்துக்கு இணையாக இந்திரபிரஸ்தம் என்னும் நகரை நிர்மாணித்தனர்.அற்புதமான மாடமாளிகைகள், தேரோடும் வீதிகள், உயர்ந்த விருட்சங்கள், தடாகங்கள், குளங்கள், அதில் அன்னம் முதலிய பறவைகள், நகரைச் சுற்றிலும் ஓடும் நந்தினி ஆறு என அந்த நகரின் எழிலோடு கவுரவர்களின் ஹஸ்தினாபுரம் கூட தோற்றுப் போனது. தர்மருடைய தலைமையில் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்நிலையில் நாரதர், பாண்டவர்கள் ஐவரும் திரவுபதியுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட சுந்தோபசுந்தர் என்னும் இரட்டை அசுரர்களின் கதையைக் கூறினார்.இவர்கள் அபூர்வமான இரட்டையர்கள்!
இருவரும் தங்களுக்கென தனிப்பெயர் வைத்துக் கொள்ளாமல் ஒரு பெயராலேயே வழங்கும் விதத்தில் ஒற்றுமையுடன் இருந்து வந்தனர். ஆனால், அவர்களே திலோத்தமையின் அழகில் ஈடுபட்டு, தங்களுக்குள் பகைமை கொண்டனர். ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு மடிந்தே போயினர்.ஒரு பெண்ணின் அழகு இப்படி ஒன்று பட்டவர்களையே கொன்றிருக்கிறது என்பதை நாரதர் கூறி பாண்டவர்கள் திரவுபதியை மையமாக வைத்து சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று உபதேசம் செய்தார்.அதைத் தொடர்ந்து பாண்டவர்கள் ஐவரும் தர்மரின் தலைமையில் திரவுபதி வரையில் ஒன்றுபட்ட கணவர்களாக திகழ ஒரு நல்லவழியை தங்களுக்குள் கண்டறிந்தனர். அதன்படி பாண்டவர்கள் ஒவ்வொருவரோடும் திரவுபதி ஓராண்டு வாழ வேண்டும். ஒருவரோடு அவள் வாழும் போது மற்ற நால்வர் அவர்கள் இருவரையும் பார்க்கவோ, பேசவோ கூடாது. ராஜ்ய கடமைகளை ஐவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றலாம். இந்த கட்டுப்பாட்டை எந்த காரணம் கொண்டு மீறினாலும், மீறியவர் ஒரு வருட காலம் வனவாசம் சென்று விட வேண்டும்.- என்று தங்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கி அதை பின்பற்றும் சத்யபிரமாணமும் செய்து கொண்டனர்.
அவள் ஐவரை அடைந்த நிலையிலும் அவரவர்களிடமும் அவள் கட்டுப்பாட்டோடும், கற்பு நெறி தவறாமலும் திகழ்ந்திடக் காரணம் யோனி வழி வந்தவளாக அவள் இல்லாது, அக்னியில் உடம்பெடுத்த காரணத்தால் ஐவருக்கு பத்தினியாக இருந்த போதும் கற்புநிலை தவறாமல் இருந்தாள்.இப்படி வாழ்ந்த காலத்தில் பாண்டவர்கள் விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டிற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.காண்டவபிரஸ்தத்தில் பிராமணர் ஒருவரின் பூஜைக்குரிய பசுக்களை சில கயவர்கள் திருடிச் சென்று விட, அவர் பாண்டவர்களின் அரசவைக்கு வந்து கண்ணீர் விட்டார். இந்நிலையில் அர்ஜூனன் அந்த கயவர்களைப் பிடிக்க சபதம் செய்து காண்டீபத்தோடு புறப்பட்டான். சில நாட்களிலேயே அந்த கயவர்களைப் பிடித்து பசுக்களை மீட்டு வந்து ஒப்படைத்தான். பின் அந்த கயவர்களுக்கு தண்டனை வழங்கும் நேரம் வந்தபோது, அதை தர்மர் செய்வதே முறை என்று எண்ணி, கட்டுப்பாட்டை மறந்து அவரைத் தேடிச் சென்றான். காண்டவபிரஸ்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் தர்மர் திரவுபதியோடு இருந்தார். அப்போது அவர்கள் இருவரையும் ஒருசேரப் பார்த்து நடந்ததைக் கூறினான். தர்மரும் கயவர்களுக்குத் தண்டனை அளித்தார்.அப்போது அர்ஜூனன்,அண்ணா! நானும் தவறு செய்து விட்டவனே! நாம் விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டை நான் மீறி விட்டேன். எனவே, எனக்கு நானே தண்டனை அளித்துக் கொள்வதே சரி - என்றவனாக வனவாசமாக காட்டுக்குப் புறப்பட்டான்.தர்மரும் மற்றவர்களும் கண்ணீரோடு விடை தந்தனர். அர்ஜூனனின் வனவாச பர்வம் தொடங்கியது.
இதில் அவன் சந்திக்கப் போகும் பாத்திரங்கள், அதன் காரணமாக அவனுக்கு ஏற்படப் போகும் அனுபவங்கள் ரசமானவை.இந்த யாத்திரையில் தான் அரவான் என்னும் பாத்திரம் இந்த உலகிற்கு கிடைத்தது. அரவான் யாரோ அல்ல..... அர்ஜூன புத்திரன் தான் இவன்!அர்ஜூனன் தன் வனவாசத்தில், ஒருநாள் கங்கை நதிக்கரையை அடைந்து அங்குள்ள அந்தணர்களோடு சேர்ந்து அக்னிஹோத்ரம் செய்யும் போது, நாகலோகத்தைச் சேர்ந்த
கவுரவ்யன் என்பவனும் அக்னி ஹோத்ரம் செய்ய வருகிறான். கவுரவ்யனின் மகள் உலுõபி. அவளும் தந்தையோடு சேர்ந்து கங்கைக்கரைக்கு வந்தாள். அவள் அர்ஜூனனின் அழகைக் கண்டு விக்கித்து நின்றாள். இத்தனைக்கும் அர்ஜூனன் ராஜகுமாரனுக்குரிய ஆடை, அலங்காரம் ஏதுமின்றி வனவாசியாக இருக்கிறான்.உலுõபி தன் மனதைப் பறி கொடுத்து அவன் மீது காதல் கொண்டாள். அர்ஜூனன் கங்கையில் மூழ்கிக் குளித்த சமயத்தில், கங்கைநதிக்கு கீழிருக்கும் தன் இருப்பிடமான நாகலோகத்திற்கு இழுத்துச் சென்றாள். அவள் ஒரு பெண் என்பதால் தன் பலத்தைக் காட்டாமல், யார் நீ? என்று கேட்டான் அர்ஜுனன். யவ்வன குமாரனே! நான் உலுõபி.... நாக கன்னி! இது நாகலோகம்.... உன்னைக் கண்ட மாத்திரத்தில் என்னுள் காதல் பிறந்து விட்டது. ஒரு நாளேனும் உன்னுடன் வாழ்ந்து ஒரு புத்திரனைப் பெற்று அவன் மூலம் கடைத்தேற விரும்புகிறேன். மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள், என்று வேண்டினாள்.அதைக் கேட்ட அர்ஜூனன்,நாக கன்னியே... உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் ஒன்றும் யுவன் அல்ல....குடும்பஸ்தன்.
திரவுபதியின் மணாளன் என்று சொல்லி வனவாசம் வந்திருப்பதைக் கூறினான். அதைக் கேட்டும் அவளது ஆசை எண்ணம் குறையவில்லை.நான் பாக்கியசாலி.... சர்வ லட்சணம் பொருந்திய தாங்களை என் மனதில் வரித்து விட்டேன். வனவாசத்தில் யார் எதை தானமாக கேட்டாலும் மறுக்க கூடாது. இம்மட்டில் என் அவஸ்தையைப் போக்கும் மருந்தாகவே உங்களைப் பார்க்கிறேன். உங்கள் ஐவருக்குள் உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடு பூலோகத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த நாகலோகத்தைக் கட்டுப்படுத்தாது. என்னோடு இல்லறம் நடத்துங்கள் என்று நான் அழைக்கவில்லை. ஒரு நல்ல புத்திரப்பேற்றின் மூலம் என் வாழ்விற்கு அர்த்தம் தேட விரும்புகிறேன். அவன் நாகனாக இல்லாமல் நரனாகவும் (மனிதனாக) இருக்கவும் ஆசை. நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அக்னி வளர்த்து அதில் பாய்வதைத் தவிர வேறு வழி எனக்கு இல்லை. தன் பொருட்டு, அவள் அக்னியில் உயிர் விட்ட பாவத்திற்கு ஆளாக விரும்பாத அர்ஜூனன் உலுõபியை ஏற்றுக் கொள்ள சம்மதித்தான். அவளும் அர்ஜூனனுக்கு மாலையிட்டு மணந்து கொண்டாள். அவள் வயிற்றில் கருக் கொண்டான் அரவான்.