பதிவு செய்த நாள்
11
நவ
2014
02:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ராமர் ஏற்படுத்திய வில்லுண்டி தீர்த்தத்திற்கு செல்லும் பாலம் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளது. ராவணன் சிறைஎடுத்துச்சென்ற சீதையை இலங்கையில் மீட்டு ராமர், லட்சுமணன், அனுமான் மற்றும் வனர சேனைகளுடன் கடல் வழியாக திரும்பி கொண்டிருந்த போது, சீதைக்கு தாகம் எடுத்தது. ராமேஸ்வரம் தீவு முழுவதும் அடர்ந்த காடு என்பதால், எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. கடற்கரை அருகில் ராமர் அம்பு எய்தார். அம்பு கடலுக்குள் விழுந்ததும், குடிநீர் பீறிட்டு மேலே எழுந்தது. அதை சீதை பருகி தாகம் தணித்ததாக கூறப்படுகிறது.
ராமர் அம்பு விட்ட இடத்திற்கு ’தண்ணீர் ஊற்று’ எனவும், ராமரின் அம்பால் குடிநீர் உருவானதால், ’வில்லுண்டி தீர்த்தம்’ எனவும் அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில், கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கடலுக்குள் அமைந்துள்ள இந்தநீரை, பக்தர்கள் புனித தீர்த்தமாக பருகி பூஜிக்கின்றனர். அங்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பாலம்,கடந்த சில ஆண்டுக்கு முன்பு உப்பு காற்று, கடல் அலைகளால் துண்டிக்கப்பட்டு, பக்தர்கள் செல்ல முடியாமல் போனது. பின், மத்திய, மாநில அரசின் சுற்றுலா நிதியின் கீழ், 2011ல் வில்லுண்டி தீர்த்த பாலம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இப்பணி முடிந்து 4 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், பாலத்தை தொடர்ந்து பராமரிக்க ராமேஸ்வரம் நகராட்சி முன்வராததால், கடல் அலைகளால் தீர்த்த பாலத்தின் அடியில் பல இடங்களில் அரிப்பும், குழிகளும் ஏற்பட்டு, சேதமடைந்துள்ளது. இதை விரைவில் மராமத்து செய்யாவிடில், தீர்த்த பாலம் முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பா.ஜ.,தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் கூறியதாவது: ராமர் உருவாக்கிய பழமையான வில்லுண்டி தீர்த்தத்திற்கு செல்ல அமைத்த பாலம் புதுப்பிக்கப்பட்ட 4 ஆண்டுக்குள் சேதமடைந்துள்ளது. இப்பாலம் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டதால், மீண்டும் பாலம் இடிந்து விழும் நிலை உள்ளது. புரதான சின்னமாக விளங்கும் வில்லுண்டி தீர்த்தத்தை பாதுகாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.