முதன்முதலில் தோப்புக்கரணம் போட்டவர் யார் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2011 03:08
உலகிலேயே எளிமையான வழிபாடுடைய தெய்வம் விநாயகர் தான். ஏழுமலையானைப் பார்க்க காரில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியே போனாலும், வரிசையில் நான்கைந்து மணிநேரம் நின்றாக வேண்டும். பலர் மலையேறிச் செல்கிறார்கள். இவர்கள் முழங்கால் முறிச்சான் என்ற இடத்தைத் தாண்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். முருகனைத் தரிசிக்க வேண்டுமென்றால் காவடியுடன் மலையேற வேண்டும். பிள்ளையார் வழிபாடு அப்படியல்ல! இருக்கிற இடத்திலேயே மூன்றே மூன்று தோப்புக்கரணம் போட்டால் போதும். இந்த தோப்புக்கரணத்தை முதன்முதலில் போட்டவர் விநாயகரின் மாமனரான திருமால் தான். ஒருமுறை, இவர் தன் சக்கரத்தை கையில் சுழல விட்டு விநாயகருக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். குழந்தை விநாயகன், அதை தும்பிக்கையால் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார். திரும்பக் கேட்டால் தர மறுத்து அடம் பிடித்தார். மருமகனை சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்து விடும் என்ற அனுமானத்தில், காதுகள் இரண்டையும் கை மாற்றி பிடித்துக் கொண்டு, அமர்ந்தார், எழுந்தார், அமர்ந்தார். இந்த வேடிக்கையைப் பார்த்து சிரித்த விநாயகரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழ மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த வேடிக்கை விளையாட்டே சமஸ்கிருதத்தில் தோர்பிகர்ணம் என்ற பெயர் பெற்றது. தோர்பி என்றால் கைகளால். கர்ணம் என்றால் காது. கைகளால் காதை பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். தமிழில் இது தோப்புக்கரணம் ஆகிவிட்டது.