மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.