திருவள்ளூர் பாலமுனீஸ்வரர் கோவிலில் 10 கிலோ வெள்ளி ரூ.25,000 கொள்ளை
பதிவு செய்த நாள்
21
பிப் 2026 12:02
திருவள்ளூர்: திருவள்ளூர் பாலமுனீஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து, 10 கிலோ வெள்ளி, 25,000 ரூபாய் கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், மணவாளநகர் அடுத்த அரண்வாயல் பகுதியில் பாலமுனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில், கோவில் பணியாளர் கிருஷ்ணன் மற்றும் வேணு ஆகியோர் கோவிலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்து. அதிர்ச்சியடைந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. தகவலறிந்து, கோவில் நிர்வாகியான தீபன்ராஜ் என்பவர் வந்து பார்த்தபோது, வெள்ளி கிரீடம், திருவாச்சி, கால் பாதம், சூலம் உட்பட 10 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 3 கிராம் அம்மன் தாலி பொட்டு மற்றும் 25,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்த புகாரை அடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோவிலில் இருந்த ‘சிசிடிவி’ கேமரா மற்றும் அதற்கான ‘ஹார்டு டிஸ்க்’ உள்ளிட்டவையும் திருடப்பட்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
|