Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரிட்டோரியாவுக்குப் போகும் ... பிரிட்டோரியாவில் முதல் நாள்
முதல் பக்கம் » இரண்டாம் பாகம்
மேலும் துன்பங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2011
04:10

ரெயில் காலையில் சார்லஸ் டவுன் சேர்ந்தது. சார்லஸ் டவுனுக்கும் ஜோகன்னஸ்பர்க்குக்கும் இடையே அந்த நாளில் ரெயில் பாதை இல்லை. நான்கு சக்கரக் குதிரைக் கோச் வண்டிகளில்தான் போக வேண்டும். அவ் வண்டி, வழியில் உள்ள ஸ்டாண்டர்ட்டனில் விடியும் வரையில் தங்கும். அவ்வண்டியில் போக என்னிடம் சீட்டு இருந்தது. வழியில் மாரிட்ஸ்பர்க்கில் ஒரு நாள் தங்கிவிட்டதால் அது ரத்துச் செய்யப்படவில்லை. அதுவல்லாமல் சார்லஸ் டவுனிலிருந்த கோச் வண்டி ஏஜெண்டுக்கும் அப்துல்லா சேத் தந்தி கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த ஏஜெண்டுக்கு, என்னை வண்டியில் ஏற்ற மறுத்துவிடுவதற்கு ஏதாவது ஒரு சாக்குப் போக்குத்தான் தேவையாக இருந்தது. ஆகவே நான் அவ்விடத்திற்குப் புதியவன் என்று கண்டு கொண்டதும், உம் டிக்கெட் ரத்தாகி விட்டது என்றார். நான் அவருக்குத் தக்க பதில் அளித்தேன். எனக்கு இடமில்லை என்று அவர் மறுத்ததற்குக் காரணம் வேறு. வண்டியில் இடமில்லை என்பதல்ல. பிரயாணிகளை வண்டிக்குள்ளேயே உட்கார வைக்க வேண்டும். ஆனால், நானோ கூலி யாகக் கருதப்பட்டேன். அதோடு புதியவனாகவும் தென்பட்டேன். எனவே, என்னை வெள்ளகாரப் பிரயாணிகளுடன் உட்கார வைக்காமல் இருப்பதுதான் சரி என்று வண்டித் தலைவர் கருதினார். கோச் வண்டியின் காரியங்களைக் கவனித்து வரும் வெள்ளைக்காரருக்குத் தலைவர் என்பது பட்டம். வண்டியில் பெட்டிமீது வண்டியோட்டிக்கு இரு பக்கங்களிலும் இரு ஆசனங்கள் இருந்தன. அவைகளில் ஒன்றில் தலைவர் உட்கார்ந்து கொள்ளுவது வழக்கம். ஆனால் இன்றோ அவர் உள்ளே உட்கார்ந்து கொண்டு, அவருடைய இடத்தை எனக்குக் கொடுத்தார். அது பெரிய அநியாயமும் அவமதிப்பும் ஆகும் என்பதை அறிவேன் என்றாலும், அதையும் சகித்துக் கொள்ளுவது நல்லது என்று நினைத்தேன். கட்டாயப்படுத்தி நான் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ள முடியாது. வெளியில் உட்கார ஆட்சேபித்திருந்தால் என்னை ஏற்றிக்கொள்ளாமலேயே வண்டி போயிருக்கும். அதனால் இன்னும் ஒரு நாள் வீணாகியிருக்கும். அதற்கு மறுநாள் என்ன நேரும் என்பதையும் கடவுளே அறிவார். ஆகவே, எனக்குள்ளேயே ஆத்திரப் பட்டுக் கொண்டாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் வண்டியோட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்துகொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும் என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. என்னை உள்ளே உட்கார வைக்கவேண்டி யிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்காரவைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்காரமாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார் என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.

இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவரை விட்டுவிடும். அடிக்காதேயும். அவர் மீது குற்றம் இல்லை. அவர் செய்தது சரியே. அவர் அங்கே இருக்க முடியாதென்றால் இங்கே வந்து எங்களுடன் உட்கார்ந்த கொள்ளட்டும் என்றனர். அது முடியாது என்று தலைவர் கத்தினார். ஆனாலும், கொஞ்சம் அவமானம் அடைந்துவிட்டவர் போலவே காணப்பட்டார். என்னை அடிப்பதை நிறுத்திவிட்டார். என் கையை விட்டுவிட்டு, கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தார். வண்டிப் பெட்டியின் மற்றொரு பக்கத்தில் ஹாட்டன்டாட் வேலைக்காரர் உட்கார்ந்திருந்தார். எழுந்து படிக்கட்டில் உட்காரும்படி அவருக்குச் சொல்லி, அவர் காலி செய்த இடத்தில் தலைவர் உட்கார்ந்து கொண்டார்.

பிரயாணிகள் ஏறி அவரவர்களிடத்தில் உட்கார்ந்தனர். ஊதியதும், வண்டியும் வேகமாகப் புறப்பட்டுப் போயிற்று. என் இருதயமோ அதி வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. சேர வேண்டிய இடத்திற்கு உயிருடன் போய்ச் சேர முடியுமோ என்று எண்ணித் திகைத்தேன். தலைவரோ அடிக்கடி கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். இரு ஸ்டாண்டர்ட்டன் போய்ச் சேர்ந்ததும் என்ன செய்கிறேன் என்பதை காட்டுகிறேன் என்று விரலை ஆட்டி, உறுமிக் கொண்டே இருந்தார். நான் வாய் திறவாது உட்கார்ந்திருந்தேன், எனக்கு உதவுமாறு கடவுளைப் பிரார்த்தித்தேன்.

இருட்டியதும் ஸ்டாண்டர்ட்டன் போய்ச் சேர்ந்தோம். அங்கே சில இந்திய முகங்களைக் கண்டதும் ஒரு சிறிது ஆறுதல் அடைந்து பெரு மூச்சு விட்டேன். நான் வண்டியிலிருந்து இறங்கியதும் அந்த நண்பர்கள், உங்களை வரவேற்று, ஈஸா சேத்தின் கடைக்கு அழைத்துச் செல்ல இங்கே வந்திருக்கிறோம். தாதா அப்துல்லாவிடமிருந்து எங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது என்றார்கள். நான் அதிக மகிழ்;ச்சி அடைந்தேன். சேத் ஈஸா ஹாஜி ஸூமாரின் கடைக்குச் சென்றோம். சேத்தும் அவருடைய குமாஸ்தாக்களும் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சொன்னேன். கேட்டு அதிக வருத்தப்பட்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களையெல்லாம் கூறி என்னைத் தேற்றினார்கள்.

நடந்ததையெல்லாம் கோச் வண்டிக் கம்பெனியின் ஏஜெண்டுக்கு அறிவிக்க விரும்பினேன். எனக்கு நேர்ந்ததையெல்லாம் எடுத்துக்கூறி அவருடைய ஆள் என்னை மிரட்டியதையும் அவர் கவனத்திற்கு கொண்டு வந்து ஒரு கடிதம் எழுதினேன். மறுநாள் காலை நாங்கள் புறப்படும்போது மற்ற பிரயாணிகளுடன் என்னை உள்ளே உட்கார வைப்பதாக வாக்குறுதி தரவேண்டும் என்றும் அவரிடம் கேட்டேன். இக்கடிதத்திற்கு ஏஜெண்டு பின் வருமாறு பதிலளித்தார். ஸ்டாண்டர்ட்டனிலிருந்து வேறு ஆட்களைக் கொண்ட பெரிய வண்டி போகிறது. நீங்கள் புகார் செய்யும் அந்த ஆசாமி நாளைக்கு அங்கே இருக்க மாட்டார். மற்ற பிரயாணிகளுடன் உங்களுக்கும் இடம் இருக்கும். இது ஒருவாறு எனக்கு ஆறுதலை அளித்தது என்னை அடித்த ஆசாமி மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற நோக்கமே எனக்கு இல்லை. ஆகவே, அடிப்பட்ட அத்தியாயம் அத்தோடு முடிந்தது.

மறுநாள் காலையில் ஈஸா சேத்தின் ஆள் என்னைக் கோச் வண்டிக்கு அழைத்துச் சென்றார். எனக்கு நல்ல ஆசனம் கிடைத்தது. அன்றிரவு பத்திரமாக ஜோகன்னஸ்பர்க்கை அடைந்தேன். ஸ்டாண்டர்டன் சிறு கிராமம், ஜோக்கன்னஸ்பர்க்கோ பெரிய நகரம். அப்துல்லா சேத் ஜோகன்னஸ்பர்க்கிற்கும் தந்தி கொடுத்தார். அங்குள்ள மகமது காஸீம் கம்ருதீன் கம்பெனியின் விலாசத்தையும் என்னிடம் கொடுத்திருந்தார். என்னைச் சந்தித்து அழைத்துப் போவதற்கு கம்பெனியின் ஆள் ஒருவரும் வண்டி நிற்கும் இடத்திற்கு வந்திருந்தாராம். ஆனால், நான் அவரைப் பார்க்கவும் இல்லை. அவர் என்னைத் தெரிந்து கொள்ளவும் இல்லை. ஆகவே, ஒரு ஹோட்டலுக்குப் போவது என்று முடிவு செய்தேன். பல ஹோட்டல்களின் பெயர்கள் எனக்குத் தெரியும். வண்டியை அமர்த்திக் கொண்டு நேரே கிராண்டு நாஷனல் ஹோட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். மானேஜரைப் பார்த்து, தங்குவதற்கு ஓர் அறை வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். இடம் நிரம்பி விட்டது * வருத்தப் படுகிறேன் என்று மரியாதையாகக் கூறி, என்னை வழியனுப்பி விட்டார். ஆகவே, முகமது காஸீம் கம்ருதீன் கடைக்கு ஓட்டுமாறு வண்டிக்காரனிடம் கூறினேன். அங்கே அப்துல்கனி சேத், என்னை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அன்போடு வரவேற்றார். ஹோட்டலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கேட்டு விட்டு, விழுந்து விழுந்து சிரித்தார். ஹோட்டலில் இருக்க உங்களை அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்? என்றார்.

ஏன் அனுமதிக்கமாட்டார்கள்? என்று நான் கேட்டேன். நீங்கள் இங்கே சில தினங்கள் தங்கியதும் அதைத் தெரிந்து கொள்ளுவீர்கள் என்றார். இது போன்றோர் நாட்டில் நாங்கள்தான் வசிக்க முடியும். ஏனெனில், பணம் சம்பாதிப்பதற்காக அவமானங்களைச் சகித்துக் கொள்ளுவதைக் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. ஆகையால், நாங்கள் இங்கே இருக்கிறோம் என்றார். அதோடு தென்னாப்பரிக்காவில் இந்தியர் அனுபவித்துவரும் துன்பங்களைப் பற்றிய கதையையும் விரிவாகக் கூறினார். மேலே போகப் போகச் சேத் அப்துல்கனியைக் குறித்து நாம் அதிகமாகத் தெரிந்து கொள்ளுவோம்.

அவர் மேலும் சொன்னதாவது, உங்களைப் போன்றவர்களுக்கு ஏற்ற நாடல்ல இது. நீங்களோ, நாளை பிரிட்டோரியாவுக்குப் போக வேண்டியிருக்கிறது. மூன்றாம் வகுப்பு வண்டியில்தான் நீங்கள் பிரயாணம் செய்தாக வேண்டும். டிரான்ஸ்வாலில் இருக்கும் நிலைமை, நேட்டாலில் இருக்கும் நிலைமையைவிட மகா மோசமானது. இந்தியருக்கு முதல் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டுகளைக் கொடுப்பதே இல்லை. இது சம்பந்தமாக நீங்கள் விடாமல் முயன்றிருக்க மாட்டீர்கள் என்றேன்.

விண்ணப்பங்கள் அனுப்பியிருக்கிறோம். வழக்கமாக நம்மவர்கள் முதல், இரண்டாம் வகுப்புகளில் பிரயாணம் செய்ய விரும்புவதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன் என்றார் சேத் கனி. ரெயில்வே விதிகளைத் தருவித்து, அவற்றைப் படித்துப் படித்துப் பார்த்தேன். விதிகளில் ஓரளவு இடம் இருந்ததைக் கண்டேன். டிரான்ஸ்வாலின் பழைய சட்டங்களின் வாசகங்கள் அவ்வளவு திட்டவட்டமாக இல்லை. ரெயில்வே விதிகளோ, அதையும் விடத் திட்டவட்டமில்லாமல் இருந்தன. நான் முதல் வகுப்பிலேயே போக விரும்புகிறேன். அப்படிப் போக முடியவில்லையென்றால், பிரிட்டோரியாவுக்கு முப்பத்து ஏழு மைல் தூரமேயாகையால் கோச் வண்டியில் போகிறேன் என்று சேத்திடம் சொன்னேன்.

இதனால் ஏற்படக் கூடிய காலதாமதத்தையும் பணச் செலவையும் சேத் அப்துல் கனி, எனக்கு எடுத்துக்கூறினார். ஆனால், முதல் வகுப்பில் பிரயாணம் செய்வதென்ற என் யோசனையை ஒப்புக் கொண்டார். அதன் பேரில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். நான் பாரிஸ்டர் என்றும், நான் முதல் வகுப்பிலேயே எப்பொழுதும் பிரயாணம் செய்வது வழக்கம் என்றும் அதில் குறிப்பிட்டேன். பிரிட்டோரியாவுக்குச் சீக்கிரத்தில் நான் போக வேண்டியிருக்கிறது என்றும், அவருடைய பதிலுக்காகக் காத்திருக்க நேரமில்லையாகையால் பதிலை ஸ்டேஷனிலேயே நான் வாங்கிக் கொள்ளுவதாகவும், முதல் வகுப்பு டிக்கெட்டை எதிர்பார்க்கிறேன் என்றும் அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். பதிலை நேரில் வாங்கிக் கொள்ளுவதாக நான் கூறியிருந்ததற்கும் ஒரு காரணம் உண்டு கூலி பாரிஸ்டர் என்றால் எப்படி இருப்பார் என்பதைக் குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்கும் ஒரு வகையான எண்ணம் இருக்கக்கூடும். ஆகையால், எழுத்து மூலம் ஸ்டேசன் மாஸ்டர் எனக்குப் பதில் அனுப்புவதாக இருந்தால். இல்லை என்றுதான் எனக்கு நிச்சயமாகச் சொல்லிவிடுவார். எனவே, சரியான ஆங்கில உடையில் அவரிடம் போய், நேரில் பேசினால் முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்துவிடும்படி செய்து விடக்கூடும் என்று எண்ணினேன். மறுநாள் காலை நாகரிகமான சட்டை, டை முதலியவைகளை அணிந்து கொண்டு, ஸ்டேஷனுக்குப் போய், என் கட்டணத்திற்காக சவரனை டிக்கெட் கொடுக்கும் இடத்தில வைத்து முதல் வகுப்பு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கேட்டேன்.

இக் கடிதத்தை நீங்கள்தானே அனுப்பினீர்கள் ? என்று ஸ்டேஷன் மாஸ்டர் என்னைக் கேட்டார். நான் தான் அனுப்பினேன். எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தால் அதிக உபகாரமாக இருக்கும். நான் இன்றே பிரிட்டோரியாவுக்குப் போயாக வேண்டும் என்றேன். அவர் சிரித்தார். பச்சாதாபப்பட்டார். பின்வருமாறு சொன்னார், நான் டிரான்ஸ்வால்காரன் அல்ல, ஹாலந்துக்காரன் உங்கள் உணர்ச்சியை நான் மதிக்கிறேன். உங்களிடம் எனக்கு அனுதாபமும் உண்டு. உங்களுக்கு டிக்கெட் கொடுக்கவே விரும்புகிறேன், ஆனால், ஒரு நிபந்தனை, உங்களை மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடுமாறு கார்டு கூறினால், என்னை இவ்விஷயத்தில் சிக்க வைத்துவிடக் கூடாது. ரெயில்வே கம்பெனிமீது நீங்கள் வழக்குத் தொடுத்துவிடக்கூடாது என்றே கூறுகிறேன். சுகமாகப் போய் சேருங்கள். பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் ஒரு கனவான் என்பதைக் காண்கிறேன்.

இவ்விதம் கூறி அவர் எனக்கு டிக்கெட் கொடுத்தார். அவருக்கு நன்றி செலுத்தினேன். தேவையான உறுதி மொழிகளையும் அவருக்கு கொடுத்தேன். என்னை வழியனுப்புவதற்காக சேத் அப்துல் கனி, ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இச் சம்பவம் அவருக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது. ஆனால் அவர் ஓர் எச்சரிக்கையையும் செய்தார். நீங்கள் தொந்தரவில்லாமல் பிரிட்டோரியா போய்ச் சேர்ந்தால், அது கடவுள் கிருபைதான். முதல் வகுப்பு வண்டியில் உங்களைக் கார்டு விட்டுவைக்க மாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவர் விட்டு வைத்தாலும் பிரயாணிகள் விட்டுவைக்க மாட்டார்கள் என்றார்.

முதல் வகுப்பு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். வண்டியும் புறப்பட்டு விட்டது. ஜெர்மிஸ்டன் என்ற இடத்தில் டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்காகக் கார்டு வந்தார். நான் அங்கே இருப்பதைக் கண்டதும் கோபம் அடைந்தார். மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடுமாறு விரலாலேயே சமிக்ஞை செய்தார். என்னிடம் இருந்த முதல் வகுப்பு டிக்கெட்டை அவரிடம் காட்டினேன். அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடு என்றார். அந்த வண்டியில் என்னைத்தவிர ஆங்கிலப் பிரயாணி ஒருவரும் இருந்தார். அவர் கார்டைக் கண்டித்தார். அந்தக் கனவானை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் ? அவரிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருப்பதை நீர் பார்க்கவில்லையா ? அவர் என்னோடு பிரயாணம் செய்வதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபம் இல்லை என்றார். பிறகு அவர் என்னைப் பார்த்து, நீங்கள் இருக்கும் இடத்திலேயே சௌகரியமாக இருங்கள் என்றார். ஒரு கூலியுடன் பிரயாணம் செய்ய நீங்கள் விரும்பினால் எனக்கு என்ன கவலை? என்று கார்டு முணுமுணுத்தார். இரவு எட்டு மணிக்கு ரெயில் பிரிட்டோரியாவைச் சேர்ந்தது.

 
மேலும் இரண்டாம் பாகம் »
temple news

ராய்ச்சந்திர பாய் அக்டோபர் 01,2011

பம்பாய் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது என்று முந்திய அத்தியாயத்தில் கூறினேன். ஜூன், ஜூலை ... மேலும்
 
temple news
என் மூத்த சகோதரர் என்னைப் பற்றி எவ்வளவோ அதிக நம்பிக்கைகளையெல்லாம் வைத்திருந்தார். பணம், பெயர், புகழ் ... மேலும்
 
temple news

முதல் வழக்கு அக்டோபர் 01,2011

பம்பாயில் இருந்தபோது, ஒரு புறம் இந்தியச் சட்டத்தைப் படிக்கலானேன், மற்றொரு புறமோ, உணவைப் பற்றிய என் ... மேலும்
 
temple news

முதல் அதிர்ச்சி அக்டோபர் 01,2011

ஏமாற்றத்துடன் பம்பாயிலிருந்து புறப்பட்டேன். ராஜ்கோட்டிற்குப் போய் அங்கே என் அலுவலகத்தை அமைத்துக் ... மேலும்
 
temple news
அந்த அதிகாரியிடம் நான் போனதே தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் காட்டிய பொறுமையின்மையும் அளவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar