பதிவு செய்த நாள்
01
அக்
2011
03:10
ஏமாற்றத்துடன் பம்பாயிலிருந்து புறப்பட்டேன். ராஜ்கோட்டிற்குப் போய் அங்கே என் அலுவலகத்தை அமைத்துக் கொண்டேன். அங்கே என் தொழில் கொஞ்சம் நன்றாகவே நடந்து வந்தது. மனுக்களும், விண்ணப்பங்களும் தயாரித்துக் கொடுப்பதில் சராசரி மாதத்திற்கு ரூ. 300 எனக்குக் கிடைத்து வந்தது. இதற்கு என் சொந்தத் திறமையைவிட என் சகோதரரின் செல்வாக்குத்தான் முக்கியமான காரணம். அவருடைய கூட்டாளியான வக்கீலுக்குத் தொழில் நன்றாக நடந்து வந்தது. உண்மையில் முக்கியமானவையாக இருக்கும், அல்லது முக்கியமானவை என்று அவருக்குத் தோன்றும் மனுக்களைத் தயாரிக்கும் வேலையை, அவர், பெரிய பாரிஸ்டர்களிடம் கொடுத்துவிடுவார். அவரிடம் வரும் ஏழைக் கட்சிக்காரர்களுக்காகத் தயாரிக்க வேண்டிய விண்ணப்பங்களே என் பங்கில் விழுந்தன.
வழக்குப் பிடித்துத் தருகிறவர்களுக்குத் தரகுப் பணம் கொடுப்பதில்லை என்ற கொள்கையைப் பம்பாயில் நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வந்தேன். ஆனால், அந்தக் கொள்கையை இப்போது நான் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நிலைமைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்றார்கள். பம்பாயில் தரகுப் பணம், வழக்குத் தரகர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கோ, நம்மை அமர்த்தும் வக்கீலுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு பம்பாயைப் போன்றே, இங்கும் ஒருவர் கூடப் பாக்கியில்லாமல் எல்லாப் பாரிஸ்டர்களும் தரகு கொடுக்கிறார்கள் என்றும் எனக்குச் சொன்னார்கள்.
என் சகோதரர் கூறிய வாதத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் சொன்னார் நான் மற்றொரு வக்கீலுடன் கூட்டாளியாக இருக்கிறேன். உன்னால் செய்ய முடியும் வேலைகள் எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். அப்படியிருக்க, என் கூட்டாளிக்குத் தரகுத் தொகை கொடுக்க நீ மறுத்துவிட்டால், நிச்சயமாக என் நிலைமை சங்கடமான தாகிவிடும். நீயும் நானும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆகையால், உனக்குக் கிடைக்கும். ஊதியம் நம் பொது வருமானத்தில் சேர்ந்துவிடுகிறது. எனவே, அதில் எனக்கு ஒரு பங்கு, தானே கிடைத்துவிடுகிறது. ஆனால், என் கூட்டாளியின் நிலைமை என்ன ? உனக்குக் கொடுக்கும் அதே வேலையை, அவர் வேறொரு பாரிஸ்டரிடம் கொடுக்கிறார். என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது இவருக்கு அவரிடமிருந்து நிச்சயமாகத் தரகுப் பணம் கிடைத்துவிடும் இந்த வாதம் என்னை மாற்றிவிட்டது. நான் பாரிஸ்டர் தொழிலை நடத்த வேண்டுமானால் இத்தகைய வேலைகளுக்குத் தரகு கொடுப்பதில் என் கொள்கையை வற்புறுத்தமுடியாது என்பதை உணர்ந்தேன். இப்படித் தான் எனக்குள்ளேயே நான் விவாதித்துக் கொண்டேன், உண்மையைச் சொன்னால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன். என்றாலும் இன்னும் ஒன்றும் கூறுவேன். இங்கே கொடுத்ததைத் தவிர வேறு எந்த வழக்குச் சம்பந்தமாகவும் நான் தரகு கொடுத்ததாக நினைவு இல்லை.
இவ்விதம் என் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதை நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். என்றாலும் இச்சமயத்தில்தான், என் வாழ்க்கையிலே முதல் அதிர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி என்றால் அவர் எப்படியெல்லாம் இருப்பார் என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அச் சமயம் வரையில் அப்படிப்பட்ட ஒருவரை நான் நேருக்கு நேராகப் பார்த்ததில்லை.
போர்பந்தரின் காலஞ்சென்ற ராணா சாகிப் பட்டத்திற்கு வருவதற்க முன்னால், என் சகோதரர் அவருக்க காரியதரிசியாகவும் ஆலோசகராகவும் இருந்தார். என் சகோதரர் அந்த உத்தியோகத்தில் இருந்தபோது ராணாவுக்குத் தவறான ஆலோசனைகளைக் கூறிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டை என் சகோதரரின் தலை மீது இப்பொழுது சுமத்தியிருந்தார்கள். விஷயம் ராஜீய ஏஜெண்டிடம் போய்விட்டது. அவரோ, என் சகோதரர் மீது கெட்ட அபிப்ராயம் கொண்டிருந்தார். நான் இங்கிலாந்தில் இருந்தபோது, இந்த அதிகாரியை அறிவேன். ஓர் அளவுக்கு அவர் எனக்கு நண்பராகவும் இருந்தார் என்று சொல்லலாம். அந்தச் சிநேகிதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ராஜீய ஏஜெண்டிடம் தம்மைப்பற்றி நான் பேசி, அவருக்கு இருந்த தவறான அபிப்ராயத்தை நான் போக்க வேண்டும் என்று என் சகோதரர் விரும்பினார்.
இந்த யோசனை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை. இங்கிலாந்தில் ஏற்பட்ட சொற்ப நட்பை நான் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கக்கூடாது என்று எண்ணினேன். என் சகோதரர் செய்தது தவறாகவே இருக்கு மாயின், என் சிபாரிசினால் என்ன பயன் ? அவர் குற்றமற்றவர் என்றால் முறைப்படி விண்ணப்பத்தை அனுப்பிவிட்டுத் தாம் நிரபராதி என்ற தைரியத்துடன் முடிவை எதிர் நோக்குவதே சரியானது. ஆனால் நான் கூறிய இந்த யோசனை என் சகோதரருக்குப் பிடிக்கவில்லை. அவர் சொன்னதாவது, உனக்குக் கத்தியவாரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. உலக அனுபவமும் உனக்கு போதவில்லை. செல்வாக்கு ஒன்றுதான் இங்கே முக்கியம். உனக்குத் தெரிந்தவரான ஓர் அதிகாரியிடம் என்னைக் குறித்து நீ ஒரு நல்ல வார்த்தை சொல்ல நிச்சயம் முடியும் என்று இருக்கும்போது சகோதரனாகிய நீ, உன் கடமையைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.
அவருக்கு நான் மறுத்துக் கூற முடியாது. அதனால், என் விருப்பத்திற்கு மாறாகவே அந்த அதிகாரியிடம் போனேன். அவரிடம் போவதற்கு எனக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்பதை அறிவேன். என்னுடைய சுயமதிப்பையும் விட்டுத்தான் நான் அவரிடம் போகிறேன் என்பதையும் நான் நன்றாக அறிந்தே இருந்தேன். ஆயினும் பார்க்கவேண்டும் என்று கோரி, அனுமதியும் பெற்றேன். எங்களுக்குள் இருந்த பழைய பழக்கத்தையும் அவருக்கு நினைவூட்டினேன். ஆனால், இங்கிலாந்திற்கும் கத்தியவாருக்கும் வித்தியாசம் அதிகம் என்பதை உடனே கண்டேன், ஓர் அதிகாரி ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன். என்னைத் தமக்குத் தெரியும் என்பதை நினைவூட்டியதால் அவருடைய கடுகடுப்பு அதிகமானதாகவே தெரிந்தது. அந்த பழக்கத்தை தவறான வழியில் உபயோகித்துக் கொள்வதற்காக நீர் இங்கே வரவில்லையல்லவா ? என்பதே அவருடைய கடுகடுப்புக்குப் பொருள்போல் தோன்றியது. அது அவர் முகத்திலும் பிரதிபலித்தது. என்றாலும், நான் வந்த காரியத்தை அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் துரை பொறுமையை இழந்துவிட்டார்.
உமது சகோதரர் சூழ்ச்சிக்காரர். அவரைப் பற்றி உம்மிடமிருந்து எதையும் கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு நேரமும் கிடையாது. ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டும் என்று உம் சகோதரர் விரும்பினால் முறைப்படி அதை மனுச் செய்து கொள்ளட்டும் என்றார். இந்தப் பதில் போதுமானது. இப்படிப்பட்ட பதிலே எனக்குச் சரியான தாகவும் இருக்கலாம். ஆனால், சுயநலம் ஒருவனைக் குருடாக்கி விடுகிறது. நான், என் கதையை சொல்லிக்கொண்டே போனேன். துரை எழுந்து இப்பொழுது நீர் போய்விட வேண்டும் என்றார்.
தயவு செய்து நான் சொல்லுவதை முழுவதும் கேளுங்கள் என்றேன். இப்படிச் சொன்னதும் அவருக்குக் கோபம் அதிகமாகி விட்டது. அவர் தமது சேவகனைக் கூப்பிட்டு என்னை வெளியே அனுப்பும் படி சொன்னார். அப்பொழுதும் நான் தயங்கிக் கொண்டே நின்றேன். சேவகன் உள்ளே வந்து, என் தோளில் கைபோட்டு என்னை வெளியே தள்ளிவிட்டான். துரையும் சேவகனும் போய்விட்டனர். நானும் புறப்பட்டேன். கோபமும் ஆத்திரமும் என் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தன. உடனே ஒரு குறிப்பு எழுதி, அதை அவருக்கு அனுப்பினேன். அக்குறிப்பில், நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். உங்கள் சேவகனைக் கொண்டு என்னைத் தாக்கிவிட்டீர்கள். இதற்குத் தக்க பரிகாரம் செய்யாவிட்டால், நான் உங்கள் மீது வழக்குத் தொடர நேரும் என்று எழுதியிருந்தேன்.
உடனே அவருடைய சிப்பாயின் மூலம் எனக்கு பின் கண்டபதிலும் கிடைத்தது. நீர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டீர். போய்விடுமாறு நான் உம்மிடம் கூறியும், நீர் போகவில்லை. உம்மை வெளியே அனுப்புமாறு என் சேவகனுக்கு உத்தரவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. வெளியே போகுமாறு அவன் சொன்னதற்கும் நீர் போக மறுத்தீர். ஆகவே, உம்மை வெளியே அனுப்புவதற்குப் போதுமான பலாத்காரத்தை அவன் உபயோகிக்க வேண்டியதாயிற்று. உமது விருப்பம் போல் எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் நீர் எடுத்துக் கொள்ளலாம.
இந்தப் பதிலை என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு இடிந்து போய் வீடு திரும்பினேன். நடந்ததையெல்லாம் என் அண்ணனிடம் சொன்னேன், அவரும் வருத்தப்பட்டார். ஆனால் என்னைத் தேற்றுவது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. துரைமீது எப்படி வழக்குத் தொடருவது என்பது எனக்குத் தெரியாது போகவே, அவர் தமது வக்கீல் நண்பர்களிடம் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்தார் அச் சமயத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா ராஜ்கோட்டில் இருந்தார். ஏதோ ஒரு வழக்குக்காக அவர்அங்கே வந்திருந்தார். ஆனால், என்னைப் போன்ற ஒரு சின்ன பாரிஸ்டர் அவரைப் போய்ப் பார்க்க எவ்வாறு துணிய முடியும் ? அவரை அங்கே ஒரு வழக்கிற்கு அமர்த்தியிருந்த ஒரு வக்கீலின் மூலம் என் வழக்குச் சம்பந்தமான தஸ்தாவேஜூக்களை அனுப்பி, அவருடைய ஆலோசனையைக் கோரினேன். அவற்றைப் பார்த்துவிட்டு, அவர் பின்வருமாறு கூறினாராம். அநேக வக்கீல்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் இது சாதாரணமான அனுபவம் என்று காந்தியிடம் கூறுங்கள். அவர் இங்கே ஏதோ கொஞ்சம் சம்பாதித்துச் சௌக்கியமாக வாழ விரும்பினால், அக் குறிப்பைக் கிழித்தெறித்து விட்டு, அவமானத்தையும் சகித்துக் கொள்ளட்டும். துரை மீது வழக்குத் தொடுத்து அவர் அடையப் போவது எதுவும் இல்லை. அதற்கு மாறாக, தம்மையே நாசப்படுத்திக் கொண்டதாகவும் அது ஆகலாம். வாழ்க்கையைப்பற்றி அவர் இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் அவருக்கு சொல்லுங்கள்.
இந்தப் புத்திமதி, விஷம்போல எனக்குக் கசப்பாகவே இருந்தது என்றாலும் இதை நான் விழுங்கியே ஆக வேண்டியதாயிற்று. அவமானத்தைச் சகித்துக் கொண்டேன். அதனால் பலனையும் அடைந்தேன். இனி ஒருக்காலும் இத்தகைய சங்கடமான நிலைக்கு என்னை உட்படுத்திக்கொள்ள முயலமாட்டேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன்பின் இந்த உறுதியிலிருந்து மாறும் குற்றத்தை நான் செய்ததே இல்லை. இந்த அதிர்ச்சி என் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டது.