மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினூடே இந்த விரதம் இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
அஸ்வினி நட்சத்திரம் முதல் புனர்பூசம் வரையில் திருவாதிரை உற்சவ காலமாகும். அதிகாலையில் எழுந்து குளம், ஆறு போன்ற நீர்நிலையில் குளிப்பது திருவாதிரை விரதத்தின் முக்கிய அம்சம். அசுவினியன்று அருணன் உதிக்குமுன், பரணியன்று வெள்ளி தோன்றுமுன், கார்த்திகையன்று காகம் கரையும்முன், மிருக சீரிஷத்தன்று மக்கள் உணருமுன் குளிக்கவேண்டும் என்பது திருவாதிரை ஸ்நானத்தின் முறை. மிதமான குளிரும் இதமான காற்றும் வீசும் சுகமான விடியற்காலை பொழுதில் இளம் பெண்களின் பாடல் ஒலி அலை அலையென மிதந்து வரும் நீர் நிலையில் அவர்கள் குதித்து கும்மாளமிட்டுக் குளிக்கும் ஓசை, செப்புப் பானையின் வாயை மூடிவிட்டுத் தட்டுவது போல் அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் காதுகளில் எதிரொலிக்கும்.