பதிவு செய்த நாள்
02
ஜன
2026
06:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. கொளுத்தும் வெயிலில் ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை காலை ( ஜன.,3) ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
ஆதி சிவன் கோயில் என்றழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் டிச., 25 காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நடந்தது. அதன் பிறகு மரகத நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், தைலக்காப்பு, தயிர் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளிர்கிறார். இன்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை (24மணிநேரம்) தொடர் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இரவு விடிய விடிய நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் பொது தரிசனம் வழியில் 7 மணி நேரம், ரூ.10 டிக்கெட் வரிசையில் நின்றவர்கள் 5 மணி நேரம், ரூ.100, ரூ.250 டிக்கெட் எடுத்தவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சந்தனம் களைந்த மரகத நடராஜரை தரிசித்தனர்.
நாளை (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்குகிறது. முடிவில் மரகத நடராஜருக்கு புதிய சந்தனகாப்பிட்டு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் வீதியுலா, மாலை 5:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு காட்சியளித்தல், பிறகு ரிஷப வாகனகத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
* மரகத நடராஜர் அபிஷேகத்தை காண எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டிருந்தது.
* மரகத நடராஜருக்கு சாத்தப்பட்ட சந்தனம் என்ற பெயரில் கோயில் நிர்வாகத்தை தவிர்த்து சிலர் ரூ.100 முதல் ரூ.200க்கு சந்தனத்தை விற்றனர்.
* சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
* சமூக அமைப்புகள், பக்தர்கள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
* கோயில் நுழைவுபகுதியில் இருந்து 2 கி.மீ., வரை ரோட்டோரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.