மனித வாழ்க்கைப் பயணம் என்பது பிறவியுடன் இணைந்திருக்கும் மூன்று விஷயங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. நான், எனது என்னும் குணம் முதலாவது. இது ஆணவம் எனப்படுகிறது. இரண்டாவது நாம் முற்பிறவிகளில் செய்த பாவ, புண்ணியம். இது ‘கர்மா’ (கன்மம்) எனப்படுகிறது. உலக சுக போகங்களில் மயங்கி இறைவழிபாட்டை மறக்கும்‘மாயை’ என்பது மூன்றாவது. ஆணவம், கர்மா, மாயை என்ற மூன்றும் நீங்கினால் தான், பிறவித் துன்பம் நீங்கி இறைவனுடைய திருவடிகளில் நித்யானந்தமாக இருக்கும் மோட்சம் கிடைக்கும். இந்த மூன்றும் நீங்குவதற்காகவே, மூன்று கோடுகளாக திருநீற்றைப் பூச வேண்டும். மூன்று கோடுகளாக திருநீறு பூசுவதை ‘திரிபுண்டரம்’ என்பர்.