திருப்பூர்: திருப்பூர், பிச்சம்பாளையத்தில், அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற, மாரியம்மன் -– விநாயகர் கோவில்கள்(ஸ்ரீகோட்டை மாரியம்மன்), ஐநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 35 சமூகத்தினருக்கு குலதெய்வமாக அன்னை விளங்குகிறார்.
எண்ணிய காரியங்கள் நிறைவேற கோவிலில் வணங்கி, பூ கேட்டு உத்தரவு பெறும் வழக்கம் உள்ளது. நவகிரகங்கள் தம்பதியரோடு, அவரவர் வாகனத்தில் வீற்றிருப்பது, கொங்கு மண்டலத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத சிறப்பு. கோவிலில் உள்ள புலி சுட்டுப்பட்டான் கல், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவியர் என்று முப்பெரும் சக்தியர் விக்கிரகங்கள் உள்ளன. ஆதிமூலவர் சுயம்பாக எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூச்சாட்டு பொங்கல் விழா நடக்கிறது. கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை, திருக்கல்யாண வைபவம், பூச்சட்டி, பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவை நடக்கின்றன. நவராத்திரி விழா, அமாவாசை, பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு போன்றவை சிறப்பாக நடக்கின்றன. புனரமைப்பு நிறைவுற்று, இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி காலை 8:30 முதல் 9:30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக இன்று கும்பாபிஷேக விழா, மஹா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. 20ல் லட்சுமி, நவகிரக ேஹாமம், முதற்கால யாக பூஜை, 21ல் 2ம், 3ம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெறும். 22ல் 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து மஹா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.