பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
04:04
கோயில் அமைப்பில் விமானம் வேறு, கோபுரம் வேறு. கருவறையின் மீது கட்டப் பெறுவது விமானமாகும். விமானத்தில் நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகை உண்டு என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார். கோயில் கட்டிட அமைப்பு முறையின்படி இவை வெவ்வேறு அமைப்பு உடையன. விமானம் சதுர அமைப்புக் கொண்டிருந்தால் நாகர விமானம் என்று பெயர். உருண்டுள்ள வட்டமான விமானமாக இருந்தால் வேசர விமானம் என்று பெயர். எட்டுப் பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிட விமானம் என்று பெயர்.
ஒரு நிலை (ஏகதள விமானம்).
இருநிலை விமானம் (துவிதளம்).
மூன்று நிலை விமானம் (திரி தளம்),
ஐந்துநிலை விமானம் (பஞ்சதளம்)
முதலிய பாகுபாடுகளும் உண்டு.
கோபுரம் என்பது கோயிலின் நுழைவாயிலில் உயர்த்திக் கட்டப் பெறுவதாகும். சோழர் காலத்தில் சிதம்பரம் கோயிலுக்குக் கோபுரம் உயர்த்துக் கட்டுவது முதன் முதலில் தொடங்கியது. விஜய நகரப் பேரரசு காலத்தில்தான் கோபுரங்கள் அதிகமாகக் கட்டப்பட்டன. கிருஷ்ண தேவராயர் காலத்தில் கோபுரம் கட்டும் பணி செல்வாக்குப் பெற்றது. அதனால் முன் பகுதியில் உயர்த்திக் கட்டப் பெறும் கோபுரத்திற்கு இராய கோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இராஜகோபுரம் என்றும் வழங்கப்பெறும்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களிலும் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் கட்டப்பட்டன. ஐந்து நிலை, ஏழு நிலை, ஒன்பது நிலை, பதினொரு நிலை என்ற நிலையில் கோபுரங்கள் உயர்ந்தன. கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்திருக்கும். மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று, உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலைகள் உண்டோ, அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும். கோபுரத்தை உயர்த்திக் கட்டும்போது அதன் கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ப அடிப்பகுதியில் ஆழமாகக் குழி தோண்டி, மணல் பரப்பி அதன்மேல் கட்டுவதே பண்டையக் கட்டிட முறையாகும். அவ்வாறு கட்டப்பட்ட அடி நிலையின் மீதே தற்காலத்தில் மிக உயர்த்தி அவிநாசியிலும், திருவரங்கத்திலும் கோபுரங்கள் கட்டப்பட்டன. தற்காலத்தில் விமானம், கோபுரம் இவற்றின் வேறுபாடு தெரியாமல் அனைத்தையும் கோபுரம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். கருவறையின் மீது அமைந்திருப்பது விமானம். கோயிலின் நுழைவாயிலில் உயர்த்திக் கட்டப் பெறுவது கோபுரம். இரண்டு வெவ்வேறு தன்மையுடையன, அமைப்பிலும் மாறுபாடு உடையன ஆகும்.