பொதுவாக, அம்பிகையின் கண்களுக்கு விசேஷ மகிமை உண்டு. அதனால், கண்களின் சிறப்பினாலேயே பல தலங்களில் அம்பிகையின் திருப்பெயர் வழங்கப்படுகிறது. மதுரையில் மீன் போன்ற கண்களைப் பெற்றிருப்பதால் மீனாட்சியை, ‘அங்கயற்கண்ணி’ என்கின்றனர். நாகப்பட்டினத்தில் நீலோற்பல மலரின் குளிர்ச்சியைப் போல அம்பிகை தன் பார்வையை பக்தர்களுக்கு வழங்குவதால், ‘நீலாயதாட்சி’ என்ற திருநாமத்தோடு விளங்குகிறாள். ‘அம்பா நீலாயதாக்ஷி’ என்று முத்துச் சாமி தீட்சிதர் இந்த அம்பிகையை போற்றிப் பாடுகிறார். தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள் போன்றவர்களும் நீலாயதாட்சி மீது பல கீர்த்தனைகள் பாடியுள்ளனர். இங்குள்ள ஈசன், ஆதிசேஷனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியாவார். நாகராஜாவான் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்பதால், இத்தலத்துக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் உண்டானது.
அதிபத்தர் நாயனார் இத்தலத்தில் பிறந்தவர். மீனவரான இவர். தினமும் முதலில் பிடிக்கும் மீனை ஈசனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் வலையில் பொன் மீன் ஒன்று விழ, அதை மறைக்காமல் இறைவனுக்கு காணிக்கையாக்கினார். அவருடைய பக்தியுணர்வை மெச்சிய சிவபெருமான், அம்மையப்பராக அவருக்குக் காட்சி தந்து ஆட்கொண்டார். இத்தல புராணத்தை, ‘நாகைக் காரோணப் புராணம் ’ என்ற பெயரில் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடியுள்ளார். இக்கோயிலில் முக்தி மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் உள்ளது. இந்தப் பெயரில் வேறெந்த கோயிலிலும் மண்டபம் இல்லை. சனீஸ்வரரும் தசரதரும் ஒரே மண்டபத்தில் சேர்ந்து காட்சியளிக்கின்றனர். காயாரோகணரையும், நீலாயதாட்சியையும் வழிபட்டால் மறுபிறப்பு இல்லை என்பது ஐதீகம்.