பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
05:04
சபரிமலையில் கூட, 10 வயதுக்குட்பட்ட சிறுமியரையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் சன்னிதானத்திற்குள் அனுமதிப்பர். ஆனால், கேரள மாநிலம், கோட்டயம் அருகிலுள்ள கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி சன்னிதானத்திற்குள், பெண்களை அனுமதிப்பதில்லை. இங்குள்ள சுவாமியை, பிரம்மசாரி முருகன் என்கின்றனர்.
கிடங்கூர் வனப்பகுதியாக இருந்த காலத்தில், இங்கு, ஆசிரமம் அமைத்து, வசித்து வந்தார், கவுன மகரிஷி; ராவண வதத்திற்காக இலங்கை சென்ற ராமர், திரும்பி வரும்போது, கவுன மகரிஷியைச் சந்திப்பதாக கூறிச் சென்றார். ஆனால், விரைவில் அயோத்தி திரும்பாவிட்டால், பரதன் உயிரை விட்டு விடுவானோ என்ற அவசரத்தில், கவுனரை, சந்திக்காமலேயே அயோத்தி சென்று விட்டார். இதை, வேறு மாதிரியாக நினைத்த கவுனர், சீதையை பத்திரமாக அயோத்தியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராமர் சென்றிருப்பார் எனக் கருதினார். அதனால், இல்லறத்தில் இருப்பவர்களால், எதையும் சரி வர செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார், கவுனர். பின், முருகனின் தரிசனம் வேண்டி நின்றவருக்கு, ராமனுக்காவது ஒரு மனைவி; முருகனுக்கோ இரு மனைவியர்... அவரால் எப்படி தனக்கு தரிசனம் தர முடியும்... என நினைத்தவர், முருகா... நீ, உன் மனைவியரை விட்டு, எனக்கு தனித்து தரிசனம் தருவாயா... என, தினமும் பிரார்த்தித்து வந்தார்.
கருணைக் கடலான முருகனும், தன் துணைவியரை கந்தலோகத்தில் விட்டு, தனித்து, அவருக்கு காட்சியளித்தார். அவரிடம், முருகா... இல்லறத்தில் இருப்பதை விட, தனித்து வாழ்ந்தால் தான், பிறரது தேவைகளைக் கவனிக்க முடியும் என்பது என் எண்ணம்; அதனாலேயே, உன்னை தனித்து அழைத்தேன். எனக்கு காட்சி தந்த இதே பிரம்மசரிய வடிவில், இவ்விடத்தில் தங்க வேண்டும்... என வேண்டினார். ஒப்புக்கொண்டார், முருகன். தான் கண்ட முருகனின் வடிவத்தை, சிலையாகச் செய்து பிரதிஷ்டை செய்தார், கவுன மகரிஷி. இக்காரணத்தால், இக்கோவில் சன்னிதானத்திற்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. ஆனால், சன்னிதானத்துக்கு வெளியே நின்று, பிரார்த்தனை செய்யலாம். குருவாயூரப்பன் சிலை போலவே இருக்கும் இம்மூர்த்தியை, கிடங்கூரப்பன் என்பர். குழந்தை வரம் கேட்டு, தம்பதி சமேதராக இங்கு வருவோர் அதிகம். பெண்கள் வெளியில் நின்றும், ஆண்கள் சன்னிதானத்திற்குள் சென்றும் குழந்தை வரம் கேட்பர். குழந்தை பிறந்த பின், கூடியாட்டம் என்ற பிரம்மசாரி கூத்தை நிகழ்த்துவர். தமிழகத்தைப் போன்று, காவடி, துலாபாரம் வழிபாடும் உண்டு. பிரம்மசாரியாக இருந்தாலும், திருமணத் தடையை நீக்க, சுயம்வர அர்ச்சனை நடப்பது தான் வித்தியாசம். நினைத்தது நிறைவேற, இங்குள்ள பெருமாளுக்கு பால் பாயசம் படைப்பர். கேரளாவிலுள்ள கோவில்களிலேயே இக்கோவில் கொடி மரம் தான் உயரமானது; கொடி மரத்தின் உச்சியில் மயிலும், ஐயப்பன், பகவதி அம்மன் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஊரை, பரசுராமர் உருவாக்கியதாக தல வரலாறு கூறுகிறது. கோட்டயத்தில் இருந்து பாலா என்ற ஊருக்கு செல்லும் வழியில், 20 கி.மீ., துாரத்தில் உள்ளது, கிடங்கூர்; இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, கோவில்.