மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ்பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். சதுரகிரி மலையில் மகாலிங்கத்தை பிரதிஷ்டை செய்த அகத்தியர், அதை சுந்தரானந்தரின் மேற்பார்வையில் விட்டுச் சென்றார். அதனால் அவருக்கு ‘சுந்தர மகாலிங்கசுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. புதன் தலமாக மதுரை விளங்குவதால், புதன் கிழமையில் சித்தரை வழிபட கல்வியில் மேம்பாடு உண்டாகும். நினைத்தது நிறைவேற பக்தர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் (பூப்பந்தல்) வழிபாடு செய்கின்றனர். சிவனே சித்தராக எழுந்தருளி, கல் யானைக்கு கரும்பு கொடுத்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதன்பின் ‘எல்லாம் வல்ல சித்தர்’ என பெயர் வந்தது.