திருச்செந்துார் முருகன் கோவிலில் ராஜகோபுர கலசங்கள் நிலைநிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2025 10:01
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எச்.சி.எல்., நிறுவனம் சார்பில் 200 கோடி மற்றும் தமிழக அரசு 100 கோடி என, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. 137 அடி உயரமும், ஒன்பது நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. கோபுரத்தின் கீழ்த்தள பகுதிகள், துாண்கள் புதுப்பிக்கும் பணிகளும், ராஜகோபுரத்தில் உள்ள ஒன்பது கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காக கோபுரத்தில் இருந்த கலசங்கள் கீழே கொண்டு வரப்பட்டு, அவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், ஒன்பது கலசங்களும் கோபுர உச்சியில் நிலை நிறுத்தப்பட்டன. கும்பாபிஷேகம் நாளில் அந்த கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.