பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
03:07
அம்பிகையின் ஸ்தோத்திரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது லலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களும் பிரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ளன. இந்த நாமாவளிகள், அம்பிகையைச் சூழ்ந்திருக்கக்கூடிய ரஹஸ்ய யோகினிகளால் அருளப்பட்டவை. இவற்றை ஹயக்ரீவர், தவசீலரான அகத்தியருக்கு உபதேசமாக அருளினார். தெய்வங்களுக்கான சகஸ்ரநாமாக்கள் பல உண்டு என்றாலும், அவை அனைத்திலும் வேறுபட்டது. இந்த லலிதா சஹஸ்ரநாமம். ‘ஸ்ரீமாதா’ என்று கூறினாலே ஆயிரம் நாமாக்களை கூறிய புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஆம், அவளே இந்தப் பிரபஞ்சத்தின் தாய், ஆதாரம் என்பதை உணர்த்தும் மிக பலம் வாய்ந்த மந்திரச் சொல் ‘ஸ்ரீமாதா’ - தாய். நாம் அனைவரும் அவளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தோமானால் குழப்பங்கள் எதுவும் ஏற்படாது. உலகம் முழுவதும் அமைதி நிலவும். ‘நாம பாராயண ப்ரீதா ’ என்று, நாமாக்களைப் பாராயணம் செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய பராசக்தியை வழிபடுவது, அனைவருக்கும் பொதுவானதே.
ஆனால், லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் பல ரகசிய தேவதைகளின் சிறப்புகள், உபாஸனை முறைகள் விளக்கப்பட்டுள்ளதால், தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜபிப்பது சிறந்தது. ஸ்தோத்திரம் முடிந்தவுடன், சுமார் 85 சுலோகங்களில்... இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களை, மிகவும் விஸ்தாரமாக ஹயக்ரீவர் அகத்தியருக்கு விளக்கியுள்ளார். இந்த -ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்களைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும். கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும். புனித க்ஷேத்திரத்தில் கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த பலன் கிடைக்கும் என்று விசாரித்துள்ளார் ஹயக்ரீவர்.
குறிப்பாகப் புண்ணிய நாள்கள், வெள்ளிக்கிழமைகள், ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திர நாள்கள், நவமி, சதுர்த்தசி, பவுர்ணமி நாள்களில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும். பவுர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இதில் ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பிடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல், விபூதியைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும். குடத்தில் நீர் நிரப்பி லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து அந்த நீரால் நீராடினால் பூத, பிரேத, பிசாசு போன்ற உபாதைகள் விலகும். வெண்ணெய்யில் மந்திரித்துக் கொடுத்தால், பிள்ளைப்பேறு கிடைக்கும். இந்தப் பாராயணத்தால் போர்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவார்கள். இப்படி, பலவித பலன்களை தேவியின் அருளால் நாம் பெறலாம். எந்த ஒரு தேவையுமின்றி தேவியைத் துதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களாக வழிபட்டால், உயர்ந்தநிலையான மோட்சம் கிடைக்கும். சரி, பாராயணம் செய்ய முடியாதவர்கள் பலன் அடைய வேண்டும் எனில் என்ன செய்வது? கோயில்களுக்குச் சென்று வழிபடும்போது, அங்கு அனைத்துக் காரியங்களிலும் அர்ச்சகப் பெருமக்களால் துதிக்கப்பெற்று, மந்திரங்களின் அரசியாக விளங்கக்கூடிய தேவியின் அருளைப் பாமரர்களும் எளிதில் பெறலாம். தேவியை உபாசிக்கும் ஸ்ரீவித்யா உபாசகர்களை வணங்குவதன் மூலமும் இந்தப் பலன்களைப் பெறலாம். அனைத்துக்கும் தீவிரமான நம்பிக்கையும், பக்தியும், அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற எண்ணமுமே மிகவும் முக்கியமானவை.