தேவேந்திரனைப் பார்க்கவந்த துர்வாச முனிவரை இந்திரலோக யானையான ஐராவதம் தடுத்தது. சினங்கொண்ட துர்வாசர் அதை சபித்தார். அதனால் யானை தன் வெண்மை நிறத்தை இழந்து கருப்பாகியது. வருந்திய யானை மன்னிப்பு கேட்டு விமோசனத்துக்கு வழிகேட்க, பூலோகம் சென்று சிவபெருமானை வழிபடுமாறு கூறினார். அதன்படி பூவுலகம் வந்த ஐராவதம் தாராசுரம் தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சுயவடிவம் பெற்றது. கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தாராசுரம். தற்போது ஒரு பிராகாரத்துடன் உள்ள இக்கோயில் முற்காலத்தில் ஏழு பிராகாரங்களுடன் இருந்ததாம். எம்தர்மன் இங்குள்ள குளத்தில் நீராடி பாவம் நீங்கப் பெற்றானாம். சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் விளங்குகிறது. கடன், நோய், வறுமை, வழக்கு போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இத்தல சிவனை வழிபட்டால் நிவர்த்தி கிட்டும் என்பர். சர்க்கரைப் பொங்கல் தானமளிப்பது சிறப்பு.