பதிவு செய்த நாள்
31
ஆக
2018
05:08
சனி என்ற சொல்லைக் கேட்டாலே, பாகற்காயை பச்சையாக சாப்பிட்ட மாதிரி முகம் சுளிப்பர், பலர். உண்மையில், அவர் நடுநிலையானவர்; தவறு செய்வோருக்கும், சோம்பேறிகளுக்கும் மட்டும் தண்டனை கொடுப்பவர். உலகில், தவறு செய்யாத மனிதர்களே இல்லை. அதனால், அவரவர் பாவச் செயல்களுக்கு ஏற்ப, துன்பத்தை அனுபவிப்பர். அதேநேரம், தவறை உணர்ந்து, திருந்தி வாழ நினைப்போர், வேலுார் மாவட்டம், வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோவிலில் அருளும் பாகற்காய் சனீஸ்வரரை தரிசித்து வரலாம்.
ஒரு சமயம், வன்னி மரங்கள் நிறைந்த ஓர் இடத்தில் தங்கிய அகத்தியர், மணலால் லிங்கம் அமைத்து, சிவ பூஜை செய்தார். இதனால், இத்தலத்து சிவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இவ்விடத்தில் கோவில் கட்டப்பட்டது. குள்ளமான அகத்தியர் ஸ்தாபித்த இந்த சிவலிங்கம், சிறிய அளவில் இருக்கிறது. லிங்கத்தின் பாணத்தில், கைரேகைகள் தெரிகின்றன. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டோர், திங்கட் கிழமைகளில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்வர். சிவன் சன்னிதி எதிரில், அகத்தியர் சிலை உள்ளது. சதயம் நட்சத்திர நாட்களிலும், ஆவணி வளர்பிறை பஞ்சமியன்றும், இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படுகிறது. ஆவுடையார் (பீடம்) மீது நின்று, தவக்கோலத்தில் காட்சி தருகிறாள், அம்பாள் புவனேஸ்வரி. பவுர்ணமியன்று, சப்த ரிஷிகளும் இவளை பூஜிப்பதாக ஐதீகம். அன்றிரவில், அம்பாள் சன்னிதி முன், லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர்.
பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் (எட்டு திசை காவலர்கள்) தங்களுக்குரிய திசையில், தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். செல்வ விருத்திக்காக, வெள்ளிக்கிழமைகளில், வடதிசை காவலரான குபேரருக்கு, நெய் தீபம் ஏற்றியும், திருமணத் தடை நீங்க, தென் கிழக்கு திசைக்குரிய அக்னி பகவானுக்கு, சிவப்பு வஸ்திரம் சாத்தி, தக்காளி சாதம் படைத்தும், விபத்தைத் தவிர்க்க, தென் திசை காவலரான எமனுக்கு, பாலாபிஷேகம் செய்தும் வேண்டிக் கொள்கின்றனர். ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்த சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர், அது தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம். தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், கசப்பான அனுபவங்களை சனி பகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி, அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்கின்றனர். செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு, இங்குள்ள முருகனுக்கு, பீட்ரூட் சாதம் படைக்கின்றனர். வேலுாரிலிருந்து, 35 கி.மீ., துாரத்திலுள்ள வாலாஜாபேட்டை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில், 5 கி.மீ., கடந்தால், கோவிலை அடையலாம்.