பதிவு செய்த நாள்
09
பிப்
2019
11:02
பழநி: ’பழநி பஞ்சாமிர்தத்திற்கு விரைவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது’ என, இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.பழநி என்றாலே பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும். வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
கோயில் நிர்வாகம் மட்டுமின்றி, பழநியில் தனியார் பலரும் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்கின்றனர். 250 கிராம் முதல் 500 கிராம் வரை டப்பாக்களில் விற்கப்படுகிறது. கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம், அரைக்கிலோ டப்பா ரூ. 35க்கும், டின் ரூ.40க்கு விற்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. பலகோடி வருமானம் கிடைக்கிறது.இத்தனை சிறப்புமிக்க பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். சமீபத்தில், பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் புவிசார் குறியீடு பெறுவதற்கு கோயில் நிர்வாகம்தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இணை ஆணையர்செல்வராஜ் கூறுகையில், ”பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அதன்சிறப்பு, தரம், நன்மதிப்பு, விற்பனை போன்ற விபரங்களுடன், சென்னை மத்திய அரசு புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளோம். அடுத்தவாரம் இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. அதன்பின் ஓரிரு வாரத்தில் புவிசார் குறியீடு கிடைத்துவிடும்” என்றார்.