சென்னை; பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி நாடுகளிலிருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில், கட்டட கலையில் சிறப்பு அம்சம் பொருந்திய, அஷ்டாங்க விமானத்தில் அமைந்துள்ளது. கடந்த, 2012ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், பிப்., 15ம் தேதி திருப்பணி துவக்கப்பட்டது. இதில், அஷ்டாங்க விமானம், சன்னிதிகள் மற்றும் இதர இடங்களை பழுதுபார்த்து புதுப்பித்தல், வண்ணம் பூசும் பணி மற்றும் கோவில் தரை தளம் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. தவிர, கிழக்கு பக்க நுழைவாயிலில் பக்தர்கள் வரிசையாக செல்ல சாரம் கட்டுதல் மடப்பள்ளி, அன்னதானம் கூடம் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள், 2 கோடி ரூபாயில் உபயதாரர்கள் வாயிலாக பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் தை மாதம் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக, கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.