பதிவு செய்த நாள்
09
பிப்
2019
11:02
கிருஷ்ணகிரி: ஆறு நாட்களுக்கு பிறகு, கோதண்டராமர் மார்க்கண்டேய நதியை கடந்து சென்றதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைத்து, நவ., 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டு, ஜன., 16ல் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. குருபரப்பள்ளியில் உள்ள மார்க்கண்டேய நதியில் அமைத்த தற்காலிக சாலையை கடக்க முடியாமல், கோதண்டராமரை ஏற்றி வந்த லாரி, ஆறு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம், 3:30 மணிக்கு மூன்று கூடுதல் இன்ஜின்கள், மூன்று ராட்சத டிப்பர் லாரிகள் என, ஆறு லாரிகளை கொண்டு இயக்கியதால், தற்காலிக சாலையை கடந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. தொடர்ந்து சென்று, மேலுமலை அருகே நிறுத்தப்படுவதாக குழுவினர் தெரிவித்தனர். ஆறு நாட்களுக்கு பிறகு குருபரப்பள்ளியில் இருந்து, கோதண்டராமர் கிளம்பியதால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.