பதிவு செய்த நாள்
23
நவ
2024
10:11
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே --–திருமூலர்.
சாதாரண மனிதர்களாக பிறந்து, வாழ்வின் உண்மையைத் தேடி அலைந்து, உணர்ந்து ஞானிகளாக, மகான்களாக, யோகிகளாக பரிணமித்து நிற்பவர்களே சித்தர்கள். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர், ஸ்ரீலஸ்ரீ கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள். திருப்போரூரில் முத்துசாமி–- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர், சிவப்பிரகாசம்.
சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதிலும் சிந்தனையை செலுத்தினார். சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நுால்களைக் கற்றுத் தேர்ந்தார். திருவொற்றியூரில், பட்டினத்தாரின் சமாதிக்கு சென்று, துறவு கோலம் பூண்டார். வீட்டிற்கு தாய் அழைத்த போது, வீடு வரை வந்தவர், தாய் தயார் செய்து அளித்த உணவை வாசலில் இருந்தபடி சாப்பிட்டுவிட்டு, இனி துறவு வாழ்க்கை வாழப்போவதாக சொல்லி அங்கிருந்து புறப்பட்டார். அதன்பின் பசி எடுக்கும் போது, யாருடைய வீட்டின் வாசலிலாவது சென்று நிற்பார், அவர்கள் இடும் உணவை, இரு கரங்களால் ஏந்தி, பெற்றுக்கொள்வார். தனது இரு கரங்களையே பாத்திரமாக்கி உணவு வாங்கி சாப்பிட்டதால் ‘கர பாத்திர சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார். இவர் யாருடைய வீட்டில் உணவு வாங்கிச் சாப்பிடுகிறாரோ, அந்த வீட்டில் உள்ளோர் கஷ்டமெல்லாம் விலகி நன்மைகள் பல பெற்றனர்.
திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என, தனது தவவாழ்க்கையை பல இடங்களில் கழித்த அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். வியாசர்பாடியில் அவர் அமைத்த, ‘ஆனந்தாஸ்ரமம்’ காலப்போக்கில் சாமியார் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம், தத்துவாத சந்தானம்’ என்ற நுால்களை எழுதியுள்ளார். ஆஸ்ரமத்தினுள் அந்தக் காலத்திலேயே பெரிய நுாலகம் அமைத்து, அந்த இடத்தை அறிவுத்தேடல் உள்ளவர்களின் சரணாலயமாக்கினார். மரங்களும், மூலிகை செடிகளும் நட்டு வைத்து, இடத்தையே ஒரு நந்தவனமாக்கியுள்ளார். தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு, அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார்.
பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர், 1918, ஏப்., 4ல் சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது பாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இயற்கையைப் போற்றி வாழ்ந்த கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மறைவிற்கு பிறகு, அவரது தொண்டர்கள் இதனை சிவாலயமாக்கி பிரபலமாக்கியுள்ளனர். தற்போது இந்த கோவில் வளாகம், வற்றாத குளம் உள்ளிட்ட இயற்கை வளம் நிறைந்ததாக காணப்படுகிறது. கர பாத்திர சுவாமிகளுக்கு மட்டுமின்றி, இந்த வளாகத்தினுள் தங்கியிருந்து சுவாமிகளுக்கு தொண்டு செய்தவர்கள், சுவாமிகளின் முன்னோடிகள் என, பலருக்கும் சமாதி உள்ளது. அந்த சமாதிகளின் மீதெல்லாம் பலிபீடம் ஏற்படுத்தப்பட்டு, சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடைபெறுகிறது. பிற்கால சேர்க்கையாக நாகத்தம்மன் வழிபாட்டுத்தலம் போன்றவை உருவாகி, வழிபாடு செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த இடத்தின் பழமையும், பெருமையையும் உணர்ந்தவர்கள், வெளியூர்களில் இருந்து மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் இருந்தும் வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள வடபழநி ஆண்டவர் கோவிலின் உப கோவிலாக, இந்த மடாலயம் இப்போது விளங்குகிறது.
வடபழநியாண்டவர் கோவில் நிர்வாகம் நன்கு செயல்படுவதால், அதன் நிதி மற்றும் மேலாண்மை உதவியுடன், கர பாத்திர சுவாமிகள் கோவில், இறையன்பர்கள் விரும்பும் வகையில் மேம்படுத்தப்படும் என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், இந்த கோவிலை மேம்படுத்தும் பணியில் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் மற்றும் துணை ஆணையர் ஹரிகரன் தலைமையிலானோர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 106 ம் ஆண்டு குருபூஜை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்னும் பல விழாக்களை நடத்தி, கோவிலை மேலும் சிறப்பாக்கிட முனைந்துள்ளனர்.
எப்படி போவது; வடசென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரிக்கு எதிரில், சாமியார் தோட்டம் முதல் தெருவினுள் சிறிது துாரம் சென்றால் சுவாமிகளின் ஆலயத்தை தரிசிக்கலாம். இன்னும் எளிதாக, மெட்ரோரயிலில், வியாசர்பாடி ஜீவா நிலையத்தில் இறங்கி, அங்கு இருந்து ஆட்டோவில் செல்லலாம்.காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, பின் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்..