தேய்பிறை அஷ்டமி; பூலாநந்தீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு 108 குட பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2024 01:11
சின்னமனூர்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு 108 குட பாலாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் யாக வேள்விகளும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக கருதப்படுபவர் கால பைரவர். நாயை வாகனமாக கொண்ட இவர் காசி நகரின் காவல் தெய்வமாகவும், அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக விளங்குபவர். சனீஸ்வர பகவானின் நோயை குணப்படுத்தியவர். சனீஸ்வர பகவானுக்கே பைரவர் தான் குரு. எனவே தான் ஏழரை சனி உள்ளிட்ட எந்த சனி பிடித்தாலும் பைரவரிடம் சரணடைந்தால் தொல்லைகள் வராது. தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். சிவபெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள். சின்னமனூர் சிவகாமியம்மன் உடதுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று 192 வது தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 108 குடங்களில் பால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் யாகபூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று கால பைரவரை வழிபட்டனர். வாழை நாறுகளால் உருவாக்கப்பட்ட உற்சவர் கால பைரவர், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அவர் முன் மகா கால பைரவர் யாகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.