புட்டபர்த்தியில் சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2024 09:11
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. இதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வழிபட்டனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் திரண்டு வந்து அவரது மகா சமாதி முன் நின்று ஆசி பெற்றனர். பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். சாய்பாபாவின் திருஉருவப் படம் தங்கரதத்தில் வைத்து கொண்டு வரப்பட்டது. பாபாவிற்கு சிறப்பு வழிபாடு, இசைநிகழ்ச்சிகள் நடந்தன. புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இன்று காலை 8:00 மணிக்கு வேதங்கள் முழங்க நிகழ்ச்சி துவங்கியது. 8:20 மணிக்கு பிரசாந்தி பஜனை குழுவினரின் குரு வந்தனம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்புறையாற்றினார்.
கவர்னர் அப்துல் நசீர் ஆற்றிய உரை: அனைத்து மதங்களின் அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்தி லட்சக்கணக்கான பக்தர்களை சரியான பாதையில் வழிநடத்தும் ஒரு பிரகாசமான உதாரணம், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. நான் யாருடைய நம்பிக்கையையும் தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வரவில்லை. ஆனால் ஒவ்வொருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வந்து உள்ளேன் என்று பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கூறினார். இதனால் ஒரு ஹிந்து சிறந்த ஹிந்துவாகவும், கிறிஸ்துவர் சிறந்த கிறிஸ்துவராகவும், முஸ்லிம்கள் சிறந்த முஸ்லிம்களாகவும் மாறுகின்றனர்.
வலுவான முழக்கம்; தன்னலமற்ற சேவை மற்றும் கல்வியின் மூலம் மாற்றம் வரும் என்ற முழக்கத்தை வலுவாக எடுத்து உரைத்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. போரினால் சிதைந்து கிடக்கும் இன்றைய உலகில் அனைவருக்கும் சேவை செய்யுங்கள். எப்போதும் யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்ற பகவானின் வார்த்தை, இப்போதைக்கு தேவை. அந்த வார்த்தைகளால், பகவான் அன்பின் உருவகமாக திகழ்ந்தார்.
இதயத்தில் நீதி இருந்தால், குணத்தில் அழகு இருக்கும்; குணத்தில் அழகு இருந்தால் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும்; வீட்டில் நல்லிணக்கம் இருந்தால் நாட்டில் ஒழுங்கு இருக்கும்; நாட்டில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி நிலவும். ஒரே ஜாதி மனிதகுலம் என்ற ஜாதி; ஒரே மதம் அன்பு மதம்; ஒரே மொழி இதயத்தின் மொழி. கடவுள் ஒருவரே... அவர் எங்கும் நிறைந்தவர். ஒருமைப்பாட்டின் அவசியம் இருக்க வேண்டும். பகவானின் புகழ்பெற்ற கொள்கைகளான அனைவரையும் நேசி - அனைவருக்கும் சேவை செய் என்ற முக்கிய கொள்கை நினைவு கூறத்தக்கது.
மனித நேயத்துடன், அசைக்க முடியாத பக்தியுடன் செயல்படும் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில், ஒரு அன்பு தெய்வமாக, பகவானை பார்க்கிறேன். வசுதேவ குடும்பகம் என்ற உலகம் ஒரே குடும்பம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ஸ்ரீசத்ய குமார் யாதவ் பேசியதாவது: சமூக மீட்டெடுப்பு, அதன் தொலைநோக்கு தாக்கத்துக்கு, பகவானின் மகத்தான பங்களிப்பு உள்ளது. தர்மாவரம், அதன் தொகுதியில், ராயலசீமா பகுதிக்கு சுவாமிகள், சுத்தமான குடிநீர் வழங்கிய போது, நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். குடிநீர் திட்டத்தின் பயனாளியாகவும், சுகாதார துறை அமைச்சராகவும், தாயின் பெயரில் ஒரு மரம் என்ற அழைப்பை ஏற்று, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மரங்களை வளர்க்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பகவானுக்கு மாணவ - மாணவியர், பக்தர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர், பிறந்த நாள் அட்டைகள், கேக்குகள் சமர்ப்பித்தனர். மாணவர் இசைக்குழு, இன்னிசையை இசைத்து மெருகேற்றியது.
பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியிருந்த வாழ்த்து செய்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய பாபாவின் பிறந்த நாள் நுாற்றாண்டு விழா ஆரம்பமானது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழா, மனித குலத்துக்கான ஒரு வரம். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அவரது எண்ணற்ற பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பல நுாற்றாண்டுகளாக துறவிகள், ஏக் பாரத்... ஸ்ரேஸ்த பாரத் என்ற உணர்வை ஊட்டி வளர்த்து வருகின்றனர். ஸ்ரீசத்ய சாய்பாபா போன்ற ஆன்மிக மேதைகளின் வழிகாட்டுதலில், சமூக நலனும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுமே முதன்மை வகிக்கிறது.
ஸ்ரீசத்ய சாய்பாபாவின் ஆன்மிக போதனைகளின் தனித்துவத்தை, அவரின் உள்ளார்ந்த எளிமையில் காணலாம். மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை; அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய், எப்போதும் உதவு, ஒருபோதும் காயப்படுத்தாதே என்பது போன்ற அவரின் போதனைகள் மூலம் பிரதிலிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள சமூகங்களை ஏற்றுக்கொள்வது, கல்வி கற்பது மனித பண்புகளை உருவாக்குகிறது. தரமான, நவீன சுகாதாரம், ஸ்ரீ சத்யசாய் பிரேம தரு திட்டத்தின் ஒரு பகுதியாக, பத்து லட்சம் மரங்களை நடுதல்; குடிநீர், நீர்ப்பாசனம் போன்ற தொண்டு பணிகள், என் மனதை தொட்டுள்ளது. குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில், பகவான், மக்களுக்கு செய்த சேவையை பார்த்திருக்கிறேன். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அறிவுறுத்தலின்படி, ஆயிரக்கணக்கான மக்கள், மீட்பு பணிகளில் அயராது உழைத்து, உதவி செய்தனர்.
ஸ்ரீ சத்ய சாய்பாபா காட்டிய ஆன்மிகம், சேவையின் பாதையில் மேலும், மேலும் பயணிக்க, இந்த கொண்டாட்டங்கள் ஊக்கம் அளிக்கட்டும். பகவான் வாழ்க்கையும், செய்தியும் இளைஞர்கள், சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்ய வழிகாட்டட்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.