Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சங்கரலிங்கம், (சங்கர நாராயணர்)
  அம்மன்/தாயார்: கோமதி
  தல விருட்சம்: புன்னை
  தீர்த்தம்: நாகசுனை தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காமீகம்
  ஊர்: சங்கரன்கோவில்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடித்தபசு, பங்குனி - சித்திரையில் 41 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம், தை மாதம் தெப்ப உற்சவம்.  
     
 தல சிறப்பு:
     
  மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளுகின்றனர். மார்ச், செப்டம்பர் மாதங்களில், 21ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது. சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில், சங்கரன்கோவில் - 627 756, திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4636 - 222 265, 94862 40200. 
    
 பொது தகவல்:
     
  இங்கு சங்கரநாராயணர் சிறப்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

இங்கு புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை, மார்கழி திருவிழாவின்போது சிவன், ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று தெப்பத்திருவிழா நடக்கிறது.

கோயில் நுழைவு வாயிலில் அதிகார நந்தி, தன் மனைவி சுயஜ்ஜாதேவியுடன் காட்சி தருகிறார். சிவன் எதிரேயுள்ள நந்தி ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
 

ஒற்றுமை குணம் உண்டாக, தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாள், சங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  ஆடித்தபசு விசேஷம்: "தபஸ்' என்றால் "தவம்' அல்லது "காட்சி' எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

சிவத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி!: சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் அம்மாதத்தின் முதல் நாளிலும் இந்த அபிஷேகத்தை செய்கிறார்கள்.பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதுபோல, இங்கும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசல் இருக்கிறது. அன்று மகாவிஷ்ணு, பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, ரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

நாகத்தில் அமர்ந்த சிவன்: சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சன்னதியில் சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். இச்சன்னதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

பல் வலி தீர வழிபாடு!: சிவன் சன்னதி கோஷ்டத்தின் (கருவறை சுற்றுச்சுவர்) பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு "யோக நரசிம்மர்' இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.இக் கோயிலில் "சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந் தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக் கொள்கின்றனர்.பெரும்பாலான முருக தலங்களில் கந்தசஷ் டியின்போது, சூரசம்ஹாரத் திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார். ஆனால் இங்கு ஆறு முகங்களுடன் சண்முகர் செல்கிறார். சம்ஹாரத்தின்போது முருகன், விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் இவ்வாறு செல்வதாகச் சொல்கிறார்கள். மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளி னார்.நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.

சங்கரநாராயணர் சிறப்பு: சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக் கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார்.

"கோமதி' பெயர்க்காரணம்: சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், "கோமதி' என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. "ஆ' என்றாலும் "பசு' தான். "பசுக்களை உடையவள்' என்று பொருளுண்டு. திங்கள் கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கில், நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள் கிறார்கள்.அம்பாள் கோயில் களில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, "ஆக்ஞா சக்ரம்' என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இச்சக்ரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

லிங்கம் வெளிப்பட்ட விதம்: முன்பு கண்டபடி நாகராஜக்கள் வழிபட்ட லிங்கத்தைக் காலப்போக்கில் புற்று மூடி விட்டது. நாகராஜாக்கள் அதனுள்ளேயே இருந்தனர். மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் மண்ணில் பிறந்து புன்னைவனக் காவலனாக இருந்தான். அவன் காப்பறையன் என்றும், காவற்பறையன் என்றும் பெயர் பெற்றான்.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவலன். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.

திருநெல்வேலிக்கு மேற்கே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை மீனாட்சியம்மையையும், சொக்கநாதப்பெருமானையும் வழிபடுவது வழக்கம். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. அப்போது காவற்பறையன் ஓடிவந்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தான்.

உக்கிரபாண்டியர் அங்கு சென்றதும் சங்கரனார் அசரீரியாக ஆணை தர, பாண்டியர் காட்டை நாடாக்கி சங்கரநாராயணர் கோவிலையும் ஊரையும் தோற்றுவித்தார். கோயிலில் கோபுரத்தைத் தாண்டி நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் காவற்பறையனின் திருவுருவம் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மார்ச், செப்டம்பர் மாதங்களில், 21ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது. சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.