தமிழ் மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாதமும், காத்திகை நட்சத்திரத்தன்றும், பவுர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், வைகாசி விசாகமும், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளன்று அதாவது தைப்பூச நன்னாளில் சிறப்பு பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறும். தைப்பூசத்தன்று அதிகாலை ஹோமம், மதியம் அன்னதானம், யாகம், மாலையில் பக்திசொற்பொழிவு, பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் பக்கத்து கிராமங்களில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வருகிறார்கள். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.
தல சிறப்பு:
இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
திறக்கும் நேரம்:
மலையடிவாரத்தில் உள்ள கோயில்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. மலையில் உள்ள முருகன் கோயிலில் தினமும் மதியம் 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.
1000 வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது. இங்கு முருகனுக்கு அமைக்கபட்டிருந்த கோயிலும் காணாமல் போய்விட்டது. இதற்கிடையில் முத்துமாலைபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நா.பெருமாள் என்பவரின் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி தான் மலைமேல் உள்ள சுனையில் கிடக்கிறேன் என்றும் என்னை எடுத்து வணங்குங்கள் என்றும் கூறினான். முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது. அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இதற்கு பின் ஆசிரியர் திரு.கே.ஆதிநாராயணன் (பரம்பரை அறங்காவலர்) என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகபடுத்த பல முயற்சிகள் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலேடு கட்டினார்.
ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேடரில் சிலேடகா காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. அதை பார்த்து பல பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர். முருகபெருமானை வணங்க ஆரம்பித்தனர். இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும் அந்த வகையில் தோரனமலையும் தனிச்சிறப்பு பெற்றது. அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், வியாழ பகவான், நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் சுனைகளும் சுதையாலான சிவபெருமான், சரஸ்வதி, மகாலெட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் சுதையாலான பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்க முடியாதவர்கள் கீழே இவரை தரிசித்து அருள் பெறலாம். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும்.
ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள். அதன் வழியாகத் தான் ஏற வேண்டும். ஆனால் தற்போது அப்படியல்ல படிக்கட்டு வழியாக நன்றாக ஏறிச்செல்லலாம். வழியில் இரண்டு மொட்டை பாறைகள் உள்ளது. அங்கு படிக்கட்டுகளைப் பிடித்து ஏற வசதியாக கம்பிகளும் உள்ளன. அந்த வழியில் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்று நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூடங்களையும், புறப்பட்டு வரும் கடனா, ராம, ஜம்பு நதிகளை ரசித்துக் கொண்டேஉச்சியை அடையலாம். முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனை புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படும். மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்தநொடியிலேயே உணரலாம். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு பொந்து ஒன்று உள்ளது. அது சாதாரண பொந்து அல்ல அதுவும் ஒரு சுனை தான் அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னிதியும் உள்ளது.
பிரார்த்தனை
தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர, எதிரிகளின் தொல்லை அகல போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் முருகனை வணங்கிச் செல்கின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேற சப்தகன்னியரை வணங்குகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டிவரும் பெண்கள் சப்தகன்னியரை வணங்கி, அருகில் உள்ள ஆலமர விழுதுகளில் துணியைக் கொண்டு முடிச்சு போட்டு கட்டிவிட்டு செல்கிறார்கள். திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, உயர்பதவி கிடைக்கவும் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அரசமரத்தடியில் சப்த கன்னியர் வீற்றிருக்க மரத்தில் வளையல்களும், தொட்டில்களும் பிரார்த்தனைக்காக கட்டப்பட்டுள்ளன. பொங்கலிடுதல், மொட்டையடித்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்தல் போன்றவை நடக்கின்றன. நினைத்த காரியங்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை முருகப்பெருமானுக்கு செலுத்திவிட்டு செல்கின்றனர்.
தலபெருமை:
தோரணமலைக்கு தென்புறம் ராமநதி மலையில் இருந்து பாய்ந்து வருகிறது, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது. இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும்தோரனமாலைக்கு மாலையிட்டது போல் காணப்படுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நாம் அறியாமல் உடல் சிலிர்ப்தை நாம் அறிய முடியும். அங்கெல்லாம் பலசித்தர்கள் அரூபமாக வாழ்ந்துதான் வருகிறார்கள். தோரணமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 2000 அடி உயரம் கொண்டது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த தோரணமலை முருகப்பெருமான் கோயிலின் வலதுபுறம் சிறிய சுனை ஒன்று உள்ளது. இங்குள்ள வற்றாத சுனைநீர் மிகவும் சுவையானது. இதில் நீராடினாலே தங்களது நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்குள்ள 64 சுனைகளில் தேடிச் சென்று பார்த்தால் தெரியும். ஆனால் கைக்கு எட்டவில்லை.
அதோடு மட்டுமல்லாமல் இந்த சுனைகள் எல்லாம் சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாகத் தான் பக்தர்கள் கருதுகிறார்கள். மேலும் பக்கத்து கிராமங்களில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வருகிறார்கள். இந்த பகுதி விவசாயிகள் பயிர் செய்த நெல்லை அறுவடை செய்ததும், அதைக் கொண்டு இந்த கோயிலில் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். இப்படிச் செய்வதால் நெல்லில் சிறந்த மகசூல் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது. இதனால் தான், பாவம் தீர்க்க பாபநாசம் இன்பம் பெருகிட குற்றாலம் துன்பங்கள் தீர தோரணமலை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
நோய் தீர்க்கும் முருகன்: தோரணமலை முருகன் பக்தர்களின் நோய்களை தீர்க்கும் கடவுளாக விளங்குகிறார். நாடி வரும் பக்தர்களுக்கு நலமே விளைவதால் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பக்தருக்கு தீராத நோய் இருந்தது. உருவம் மாறி அகோரமாக உடல் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் இந்த கோயிலில் மகிமை அறிந்து இங்கு வந்து அணையில் நீராடி முருகனை தரிசிக்க தொடங்கினார். அன்று முதல் அந்த நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபட்டார். மேலும், தொழில் செய்து பாதிப்புக்கு உள்ளானவர்களும் இங்கு வருகிறார்கள். அவர்கள் தங்களது வேண்டுதலை முருகனின் பாதத்தில் பணிந்து கூறி, அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டுச் செல்கின்றனர். இதேபோல், பெண்களும், தாங்கள் நினைத்த காரியம் இங்கு வருவதாய் கை கூடுகிறது என்கிறார்கள்.
தல வரலாறு:
தென்திசை வந்த அகத்தியர்: இமயமலையில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண்பதற்காக முப்பது முக்கோடி தேவர்களும், உலக மக்களும் அங்கே குவிந்தனர். இதனால் இமயமலை இருக்கும் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. பூமியின் அதிர்வால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நடுங்கிப்போனார்கள். தங்கள் அச்சம் குறித்து சிவபெருமானிடம் அனைவரும் எடுத்துரைத்தனர். அப்போது சிவபெருமான், குறு முனிவரான அகத்திய முனிவரை அழைத்து, அகத்தியா! உலகத்தை சமநிலை பெறச் செய்ய உன்னால்தான் இயலும். ஆகவே நீ இப்போதே தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்! என்று கூறினார். அகத்தியன், சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருக்குள் பெரிய வருத்தம் ஒன்று இருந்தது. அதனை ஈசனிடம் வெளிப்படுத்தவும் செய்தார்.
ஐயனே! தங்கள் கட்டளையை மீறி நடக்க எனக்கு சக்தியில்லை. இருப்பினும் உலகமே காண வாய்ந்திருக்கும் உங்களது திருக்கல்யாண கோலத்தை என்னால் காண இயலாமல் போகிறதே, என்பதை எண்ணி நான் மிகவும் துயரப்படுகிறேன் என்றார் அகத்தியர். அவரை தேற்றி ஆறுதல் படுத்திய சிவபெருமான், அகத்தியா! நீ எப்போது நினைத்தாலும் நான் திருமண கோலத்தில் காட்சி தருவேன் என்று நல்லாசி கூறினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்திசை நோக்கி பயணப்பட்டார் அகத்திய முனிவர். அவர் பொதிகை மலைக்கு வந்தபோது உலகம் சமநிலையை அடைந்தது. அகத்திய முனிவர் வந்த வழியெல்லாம் புனித பூமியானது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் திருக்குற்றாலம் வந்தார். அங்குள்ள மகாவிஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றியது அவர்தான். அங்கிருந்து பொதிகை மலை செல்லும் போது அவரது பாதச்சுவடுகள் பட்ட இடம்தான் தோரணமலை.
தோரணைமலையில் தங்கிய அகத்தியர்: அகத்தியரின் மருத்துவ திறனை பயன்படுத்தி தேரையரின் சமயோசித புத்தியை வெளிப்படுத்தி சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகறிய செய்ய முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய தலம் இது. தோரணமலையில் ஒரு நாழிகை நேரம் தியானம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கிறது. எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது. அகத்தியர் திருக்குற்றாலம் வந்தபோது அங்கு வைணவத்தலத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாளை இலஞ்சி குமாரசாமியின் அருளால் சிவபெருமானாக்கி வழிபட்டு பொதிகைமலை நோக்கி வந்தார். வரும் வழியில் வானளாவ கநுவாகன அமைப்பில் உயர்ந்து நிற்கும் தோரணமலையின் அழகில் மனம் லயித்தார். மூலிகை செடிகள் ஏராளமாக செழிப்புடன் வளர்ந்திருப்பதை கண்டு பூரிப்படைந்தார். சிறிது காலம் இம்மலையில் தங்கி தவம் புரியவும், சித்த மருத்துவம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பினார். அப்பொழுது தன் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மலைமீது தவமிருந்து வணங்கி வந்தார்.
மருத்துவ ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாக அவ்வையாரின் பரிந்துரையின் பேரில் பிறவி ஊமையான ராமதேவன் எனும் அந்தணன் சீடனாக இருந்து வந்தார். மருத்துவ ஆராய்ச்சியில் தனக்கு உதவியாகவும், சிகிச்சையில் சமயோசிதமாகவும் செயல்பட்ட தன் சீடன் ராமதேவனை பாராட்டிய அகத்தியர் அவரை தேரையர் என்று அழைக்க தொடங்கினார். தேரையரின் ஊமைத்தன்மையை நீக்கி பேச்சுத்திறனை ஏற்படுத்தினார். தனக்கு தெரிந்த மருத்துவ நுணுக்கங்களையும் தேரையருக்கு கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு பொதிகைமலைக்கு சென்று விட்டார். அவரத ஆலோசனையின்பேரில் தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்தத தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார்.
தேரையர் வழிபட்ட தலம்: இந்த மலையில் அகத்தியில் சில காலம் தங்கி இருந்துள்ளார். அவரது ஆணைக்கு இணங்க, அகத்தியரின் சீடரான தேரையர் தோரணமலையிலேயே தங்கியிருந்து தவம் இயற்றி, பல சித்துக்களை செய்துள்ளார். தனது இறுதி காலத்தில் தேரையர் இங்கேயே அடங்கியதாக வரலாறு கூறுகிறது. தேரையரே இந்த மலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அறியப்படுகிறது. அகத்திய முனிவர் காலடி பட்டதாலும், சித்தர் ஐக்கியமானதாலும் இந்த பூமி மகத்துவம் நிறைந்ததாக போற்றப்படுகிறது. சித்தரின் அருள் அதிர்வலைகள் இப்போதும், எப்போதும் இந்த மலையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்தவகையில் நெல்லை மாவட்டம், ம தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம். இந்த மலை பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்கி வருகிறது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த அருள்மலையான தோரணமலை, பார்ப்பதற்கு யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் அமைந்திருக்கும். யானை என்பதற்கு வாரணம் என்று பொருள் உண்டு. எனவே இந்த மலை வாரணமலை என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி தோரணமலை என்றாகியுள்ளது. யானை வடிவமாய் அமைந்துள்ள தோரணமலையானது குலுக்கை மலை, ஆனைமலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்கு தான் தோரணமலை மீதும் முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயிலாகும். தமிழகத்தை நாயக்கர் மன்னர்கள் ஆண்டு வந்தபோது, அம்மன்னர் மரபில் வந்த வெங்கலவன் என்பவன் இம்மலையில் முருக வழிபாட்டை மேற்கொண்டார் என்றும் மலைப்பகுதியில் அவர் வசித்து வந்ததாகவும் செவி வழிச் செய்தியாக கூறுகிறார்கள். அதன் பின் யாரும் கவனிக்காததால் பாழடைந்து கிடந்தது. ஒருநாள் முருகப்பெருமான் தன் பக்தர் ஒருவரது கனவில் தோன்றி, என்னுடைய சிலை இம்மலையில் பாழடைந்து கிடக்கிறது. அதனை எடுத்து வந்து மலையில் கோயில் கட்டி வணங்கு. உனக்கு நன்மைகள் அளிப்பேன் என்று கூறினார். அந்த பக்தரும் மலையில் சென்று பார்த்தபோது மலை உச்சியில் குப்புறப்படுத்த நிலையில் முருகன் சிலை கிடந்ததை கண்டார். மனம் நெகிழ்ந்த அந்த பக்தர் சிறிய மண்டபம் ஒன்றை கட்டி, குகை போல அமைத்து அதில் முருகன் சிலையை வைத்து வணங்கினார். 1928-ல் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் சிலைதான் இன்னும் மூலவராக உள்ளது. தோரணமலையில் உச்சியில் குகையில் எழுந்தருளியுள்ள முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் அழகின் அரசனாக விளங்குகிறான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.