இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அபூர்வமாக அமர்ந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மரகதாம்பிகை சமேத மூன்றீசுவரர் திருக்கோயில்
அத்தாளநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
பொது தகவல்:
கோயில் நான்கு கால் கல் மண்டபம், முக மண்டபம், நந்தி, பலி பீடம், செப்புத்தகடு போர்த்திய கொடிமரம் ஆகியவற்றோடு விளங்குகிறது. உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் அதிகார நந்தி, சூரிய, சந்திரர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. உள் பிராகாரத்தில் தென்புறம் சுரதேவர், சப்தகன்னியர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளது. வள்ளி - தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கும் தனிச் சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அபூர்வமாக அமர்ந்துள்ளார்.மேற்குப் பிராகாரத்தில் அடுத்தடுத்து மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசர்கள் எழுந்தருளியிருப்பதால் கருவறை மூலநாயகருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இவர் கிழக்கு நோக்கி லிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார்.கோயில் மண்டபங்களின் கொடுங்கைகள் ஒன்றில் மயிலுடன் கூடிய சுப்பிரமணியருக்கு அர்ச்சகர் அடுக்கு தீபாராதனை காட்டுவது போன்றும்; கொடிமரம், நந்தி, பலிபீடம், இரண்டு பக்தர்கள் ஆகியோர் அடங்கிய தொகுப்புச் சிற்பம் ஒன்றும் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு மண்டபக் கொடுங்கையின் மேற்புறம் சிவலிங்கம், தேவி, தீபாராதனை காட்டும் அர்ச்சகர், கொடிமரம், நந்தி, பலிபீடம், இரண்டு பக்தர் சிலைகளையும் கண்டு வியக்கலாம். கருவறையின் மேல்புறத்தில் உள்ள அகலமான விமானத்தின் பீடத்தில் யாளி வரிகளும், பூதவரிகளும் உள்ளன. முன் மண்டபம், மகா மண்டபம் மற்றும் திருச்சுற்றிலும் கைகூப்பிய நிலையில் பல்வேறு அரசர்கள், தனவந்தர்கள் சிலைகளைக் காண முடிகிறது.
தல வரலாறு:
கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் கைலாயம் வந்தனர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியரும் சிவனின் உத்தரவுப்படி தென்பகுதிக்கு வந்து பொதிகை மலையில் தங்கி சிவபூஜை செய்தார். இவருக்குப் பின் இந்த பொதியமலைக்கு பல சித்தர்கள் வந்தனர். அவர்கள் அகத்தியர் பூஜை செய்த சிவனை தரிசித்த பின் இந்தப் பகுதியில் உள்ள இந்த சிவாலயத்தில் தாங்களும் சிவபூஜை செய்தனர். இதனால் இக்கோயில் சித்தர்களின் பீடமாக கருதப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அபூர்வமாக அமர்ந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : திருநெல்வேலி - தென்காசி சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும்; அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் அத்தாள நல்லூர் அமைந்துள்ளது. இதன் அருகில் திருப்புடைமருதூர் சிவாலயம் உள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து சிற்றுந்துகள் உள்ளன.