Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோணேஸ்வரர்
  அம்மன்/தாயார்: பெரியநாயகி
  தல விருட்சம்: வாழை
  தீர்த்தம்: அமிர்த தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரணாகமம்
  புராண பெயர்: திருக்குடவாயில்
  ஊர்: குடவாசல்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

சம்பந்தர், அருணகிரியார்
தேவாரப்பதிகம்பொன்னொப் பவனும் புயலொப் பவனும் தன்னொப் பறியாத தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவாயில் தனில் மன்னும் பெருங்கோயில் மகிழ் தவனே.-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 94வது தலம். 
     
 திருவிழா:
     
  மாசிமகத்தில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவாதிரை, பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 157 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல் - 612 601. திருவாரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 94439 59839. 
    
 பொது தகவல்:
     
 

இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே வெளியில் அமுத தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் சுவாமி சன்னதி பார்த்தபடி "ஆதி கஜாநநர்' என்று அழைக்கப்படும் விநாயகர் இருக்கிறார். சுவாமி சன்னதியில் இருந்து வெளியில் பார்க்கும்போது, இந்த விநாயகரின் விமான கலசம் தெரியும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர்.


பிரகாரத்தில் "குடவாயிற்குமரன்' சன்னதி இருக்கிறது. இந்த முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். இடும்பனுக்கும் சன்னதி உள்ளது. அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருடன் நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர்.  இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர்.


அருகில் சூத முனிவர், சிவனை வணங்கி தியானம் செய்தபடி இருக்கிறார். நால்வர், பரவை நாச்சியாருடன் சுந்தரர், வீணை இல்லாத சரஸ்வதி, கஜலட்சுமி, சப்தமாதர் ஆகியோரும் உள்ளனர்.


 
     
 
பிரார்த்தனை
    
 

தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். 
    
 தலபெருமை:
     
 

பெரிய துர்க்கை: சிவன் சதுர பீடத்துடன், சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமியின் மேனியில் கருடனின் அலகு பட்ட தழும்பு இருக்கிறது. பெரியநாயகி அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவள் துர்க்கையின் அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். எனவே இவளை "பெரிய துர்க்கை' (பிருஹத்துர்க்காம்பிகை) என்றும் அழைக்கின்றனர். 


சிவன் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இல்லை.
மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார். இதனை திருஞானசம்பந்தர், "எழில்கொள் மாடக்கோயில்' என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். உயரமான இடத்தில் இருந்து சிவன் காட்சி தருவதால், இத்தலத்தை "சிறிய கைலாயம்' என்றும் சொல்கிறார்கள்.


கோணேஸ்வரர்: சூதமகரிஷி, பிருகு மற்றும் தாலப்பியர் ஆகியோர் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளனர். உயிர்களை (கோ) நேசித்து, அவர்களை மீண்டும் படைக்க அருளியவர் என்பதால் இவருக்கு, "கோணேஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது. அமுதக்குடத்தின் வாயில் விழுந்த தலமென்பதால் தலம் "குடவாயில்' என்றழைக்கப்பட்டு, "குடவாசல்' என மருவியது. 


சுவாமிக்கு அமுதலிங்கேஸ்வரர் என்றும், புற்றிற்குள் இருந்ததால் "வன்மீகநாதர்' என்றும் பெயர்கள் உண்டு. கோயில் நுழைவு வாசல் எதிரே காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. அருகே நடராஜர், சிவகாமியம்பாளுடன் இருக்கிறார்.


விதவிதமான விநாயகர்: அமுத தீர்த்தக்கரையில் ஆதிகஜாநநர் என்னும் விநாயகர் இருக்கிறார். இக்கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறத்தில் "அனுமதி விநாயகர்' சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பிறகே சிவனை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே இவருக்கு இப்பெயர். இதுதவிர பிரகாரத்தில் "மாலை வழிபாட்டு விநாயகர்' என்ற விநாயகரும் இருக்கிறார். சாயரட்ச பூஜையில் இவருக்கே முதல் பூஜை செய்யப்படுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இதுதவிர, இரட்டை விநாயகர் சன்னதியும் உள்ளது.


 
     
  தல வரலாறு:
     
 

பிரளயகாலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா, ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப் படைக்க சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.


குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது.  பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான்.


கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.