மேற்கு பார்த்த கோயில். சிவன் கோயிலிலேயே திருமாலும் தனிச் சன்னதி கொண்டு விளங்குவது சில தலங்களில்தான். இந்தத் தொன்மைத் தலத்திலும் திருமால் சீனிவாசப் பெருமாள் எனும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். மூலவர் முக்தீஸ்வரர் அழகிய லிங்கமாக துலங்குகிறார். ஆதியில் அபிவிருத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டவர். அம்பிகை சவுந்தரநாயகி தெற்கு நோக்கிய தனிச்சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பு காலபைரவர், சூரியன், ராஜகணபதி, பாலகணபதி, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, செல்வ விநாயகர், பாணலிங்கம், யோகலிங்கம் ஆகியோர் அருள்கின்றனர். பிராகாரத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் உள்ளனர். இக்கோயிலுக்குரிய ஐம்பொன்னாலான சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், அஸ்திரதேவர், சுந்தரர், சண்டிகேசுவரர் சிலாரூபங்கள் பாதுகாப்பிற்காக வேறிடத்தில் உள்ள சிவன்கோயிலில் வைத்துள்ளனர். ஆண்டுதோறும் திருவிழாவின் போது அந்த சிலைகளைப் பெற்று வந்து வழிபாடு நடத்தி, உரிய காலத்தில் மீண்டும் அங்கே வைத்துவிடுவர்.
பிரார்த்தனை
பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்து ஈசனை வணங்கி பிரார்த்தித்துக் கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவம்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தல வரலாறு:
பரமன் எழுந்தருளிய காவிரிக்கரைத் தலங்களுள் ஒன்று, அபிவிருத்தீஸ்வரம். காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையில் அமைந்த தலம். மூர்த்தி, தலம், தீர்த்தங்களால் சிறப்புற்ற தலம். காவிரியே இத்தலத்திற்குரிய தீர்த்தம். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் காவிரி, இத்தலத்தில் வடக்கிலிருந்து தெற்காகத் திசை திரும்பி ஓடி, சற்று தூரம் சென்றதும் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இதன் பொருட்டே இங்கே ஈசன் கோயில் கொண்டார் என்பது ஐதிகம். விஷ்ணு, அக்னி, பிரம்மா, இந்திரன், கந்தர்வன், சந்திரன், பராசரர், ஆஞ்சநேயர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்திரன் தனது எதிரியான விருத்திராசுரனுடன் பல காலம் போரிட்டான். ஆயினும் அவனை வெல்ல முடியவில்லை. ததீசி முனிவரின் முதுகெலும்பை ஆயுதமாகக் கொண்டு போரிட்டால், விருத்திராசுரனை விரைவில் வெல்லமுடியும் என்று அறிந்து, அவரிடம் சென்றான்.
நான் உன் பொருட்டு உயிர் துறக்கிறேன். பின்னர் என் உடலிலிருந்து முதுகெலும்பை எடுத்து ஆயுதமாக்கிக் கொள் என்று அருளினார் ததீசி. அவ்வாறே அவர் உயிர் துறந்தார். அவரது முதுகெலும்பைக்கொண்டு வஜ்ஜிராயுதம் செய்து, அதை எடுத்துக்கொண்டு போருக்குச் சென்றான், இந்திரன். இம்முறை இந்திரனின் வலிமையை எதிர்க்கமாட்டாமல் விருத்திராசுரன் கடலில் சென்று ஒளிந்துகொண்டான். கடலுக்குள் அவன் எங்கிருக்கிறான் என்று எப்படித் தெரியும்? அதனால் இந்திரன் அகத்திய முனிவரிடம் சென்று பிரார்த்தித்தான். அகத்தியரும் கடல் நீரை அள்ளிப்பருகினார். அடுத்த கணம் கடல் வற்றிவிடவே, விருத்திராசுரன் வெளிப்பட்டான். இந்திரன் அவனுடன் போரிட்டு அவனை அழித்தான். இவ்வாறாக இந்திரன், தேவர்களின் நலன் காக்க அருங்காரியம் செய்த போதிலும், ததீசி முனிவர் உயிர் துறக்கக் காரணமாகிவிட்டானே அந்தப் பாவம் இந்திரனைப் பற்றிவிட்டது. அந்தப் பாவத்தைப் போக்க தேவர்களின் ஆலோசனைப்படி அபிவிருத்தீஸ்வரத்தை அடைந்து முக்தீஸ்வரரை பூஜித்தான். அதனால் இந்திரனின் பாவம் நீங்கியது. ஒரு சமயம் திருக்கொள்ளம்புதூர் வந்தார் திருஞானசம்பந்தர்.
ஓடத்தில் ஏறினார். ஓடக்காரன் வரவில்லை. சமணர்கள் ஓடக்காரனைத் தடுத்து விட்டனர். பார்த்தார், சம்பந்தர். ஈசன் மீது பதிகம் ஒன்று பாடினார். ஓடம் தானாகவே மறுகரை அடைந்தது. திருக்கொள்ளம்புதூரை தரிசித்து விட்டு, ஆற்றின் அக்கரை வழியாகவே திருவிடைவாசல் தலத்துக்குச் சென்றார். அப்போது அக்கரையில் இருந்தபடியே அபிமுக்தீஸ்வரைப் போற்றித் தொழுது பதிகம் பாடினார் என்றும் தேவாரத்தில் கிடைக்கப் பெறாமல் போன பதிகங்களுள் இத்தலத்துப் பதிகமும் இருந்திருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. மூலவர் சுயம்பு மூர்த்தம். வம்ச விருத்திக்கு பிள்ளைப்பேறும், தனவிருத்திக்கு பொருட்பேறும் அருளும் திறம் கொண்ட ஈசன் என்பதால் அபிவிருத்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டவர். அந்தப் பெயராலேயே தலத்திற்கும் அபிவிருத்தீஸ்வரம் எனப் பெயராயிற்று.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் நாளன்று சூரியனின் கதிர்கள் மேற்கு திசையிலிருந்து மாலை சரியாக 5.58 மணிக்கு மூலவரின் மீது விழுகிறது.
இருப்பிடம் : திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியிலிருந்து 4 கி.மீ. தொலைவு. குடவாசலிலிருந்தும் 4 கி.மீ. கொரடாச்சேரி இருந்து குடவாசல் செல்லும் பஸ் வழிதடத்தில்,கொரடாச்சேரியில் இருந்து,3 கி.மீ. துõரத்திலும்,குடவாசலில் இருந்து, 7 கி.மீ. துõரத்திலும் அமைந்துள்ளது இக்கோயில்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
குடவாசல்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020