Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெட்டுடையா காளி
  தல விருட்சம்: ஈச்சமரம்
  தீர்த்தம்: தெப்பம்
  ஊர்: கொல்லங்குடி
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பவுர்ணமி பூஜை  
     
 தல சிறப்பு:
     
  கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட், அரியாக்குறிச்சி-623 556, சிவகங்கை மாவட்டம்.  
   
போன்:
   
  +91-90479 28314, 93633 34311 
    
 பொது தகவல்:
     
  நீதிபதி அம்பிகை: அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க "நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை "நீதிபதி' என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.
 
     
 
பிரார்த்தனை
    
  நோய் நீங்க, திருமணம், குழந்தை பாக்கிய தோஷங்கள் நீங்க அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் நீங்க அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக கோயிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

கூடுதல் பிரார்த்தனை: ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு "கூடுதல் வழிபாடு' என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  சங்காபிஷேகம்: பங்குனியில் இங்கு 10 நாள் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது, சிவனைப்போலவே அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம் நடப்பது விசேஷம். இந்நாட்களில் அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் பவனி வருவாள். விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.

தங்க காணிக்கை: இப்பகுதியை ஆட்சி செய்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை, பேசாமல் இருந்தது. அக்குழந்தை பேச அருளும்படி அவள், அம்பிகையை வேண்டி குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இவளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் கிடைத்த 20 கிலோ தங்கத்தில் இருந்தே கோயில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமும் சூரியபூஜை: வெட்டுடைய அய்யனார் பூரணா, புஷ்கலாவுடன் பிரதான சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே யானை வாகனம் உள்ளது. இவரது சன்னதிக்கு முன்புறம் வெட்டுடையார்காளி சன்னதி இருக்கிறது. இவளே பிரதானம் என்பதால் கொடிமரம் இவளது சன்னதி எதிரேயே அமைத்துள்ளனர். தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது. அய்யனார் சன்னதியைச் சுற்றியே ஆஞ்சநேயர், சோலைமலை, கல்யாண சுந்தரேஸ்வரர், மகாவிஷ்ணு, கருப்பணர், வீரப்பர், வீரபத்திரர், முனியப்பர், பேச்சியம்மன், சூலாட்டுக்காளியம்மன், முனீஸ்பரர், பைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளனர். கோயிலுக்கு வெளியே சோணைக்கருப்பசாமி சன்னதி உள்ளது. இவரே அம்பிகையின் உத்தரவுகளைக் கேட்டு பணி செய்யும் காவல் தெய்வமாவார்.

இங்கு ஒரு குளம் உண்டு. இந்தக் குளத்தை நம்பிக்கையுடன் சுற்றினால் பிரச்னைகள் தீரும் என்பது ஜதீகம். காளியையும், அய்யனாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் அடுத்து செல்வது கோயிலுக்கு வெளியே உள்ள சோணை கருப்பண்ணசாமி சன்னதிக்குத் தான். இத்திருக்கோயிலின் நித்ய பூஜைகளை கொல்லங்குடி கிராமத்தில் உள்ள வேளார் வகுப்பினர் நடத்தி வருகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  சிவன் பிட்சாடனாராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர்.

ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையார் காளி' என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே தலம் அழைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர். முத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்த கோயிலின் பூஜையை செய்து வந்தனர்.

ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீக வித்தைகளை கற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளை பயன்படுத்தினார். இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடைய காளியம்மன். ஈசச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையா அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையா காளி என்றும் பெயர் வந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.