Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்
  அம்மன்/தாயார்: சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி
  தல விருட்சம்: கொக்கு மந்தாரை
  தீர்த்தம்: கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
  புராண பெயர்: திருக்கானப்பேர்
  ஊர்: காளையார் கோவில்
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர் வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான் கள்ளமே செய்கிலர் கருதிய கானப்பேர் உள்ளமே கோயிலா வுள்குமென் உள்ளமே.

-திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 10வது தலம்.
 
     
 திருவிழா:
     
  தைப்பூசத்தில் சுவர்ண காளீஸ்வரருக்கும், வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரத்தில் சுவர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த்திருவிழா நடக்கிறது. 11ம் திருமுறையிலும் குறிப்பிடப்பட்ட தலம். மார்கழி பவுர்ணமி, நவராத்திரியில் சிறப்பு பூஜை உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்- 630 551. திருக்கானப்பேர். சிவகங்கை மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4575- 232 516, 94862 12371. 
    
 பொது தகவல்:
     
  பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பார்கள். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்மனுக்கு சன்னதி கிடையாது. ஆனால், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

சோமேசர் சன்னதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்.

நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானை மடு. கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  யானை மடு: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது.

மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது.

யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு "யானை மடு' என்று பெயர். ராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. கோயிலுக்குள் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. தல விருட்சம் கொக்கு மந்தாரை.

மூன்று சிவன் மூன்று அம்மன்: இங்குள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருது பாண்டியர்களாலும் கட்டப்பட்டது. சோமேசர்- சவுந்தரநாயகி, சுவர்ணகாளீஸ்வரர் - சுவர்ணவல்லி, சுந்தரேஸ்வரர்- மீனாட்சி என மூன்று சிவனும், மூன்று அம்மனும்  தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூன்று சிவன், மூன்று அம்மன் இங்கு மட்டுமே உள்ளனர்.

இதில் சுவர்ணகாளீஸ்வரர் தான் தேவாரப்பாடல் பெற்றவர். இவரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.

சண்டாசுரனைக் கொன்ற காளி, சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கி, சுவர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள்.

ஆயிரம் கோயிலை தரிசித்த பலன்: இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது.

இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க, பல சிவாலயங்களை தரிசித்து வந்தான். இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான்.

இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது. சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலத்தை பாடியுள்ளனர்.
 
     
  தல வரலாறு:
     
  ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். "இறைவா! உன்னைக் காண முடியவில்லையே,' என வருந்திப் பாடினார்.

தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் "காளையார்கோவில்' ஆயிற்று.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar