ஆவணி திருவோணம், புரட்டாசி கடைசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி.
தல சிறப்பு:
சுதையாலான பிரம்மாண்ட திருமேனி
திறக்கும் நேரம்:
காலை6- 11-மணி, மாலை5 - இரவு 8 மணி
முகவரி:
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில்,
வேம்பத்தூர் - 630 565.
சிவகங்கை மாவட்டம்
போன்:
+91- 4575- 236 284, 236 337 97903 25083
பொது தகவல்:
ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.
பிரார்த்தனை
மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
இங்குள்ள பெருமாள், இடது கையால் நம்மை வர வழைத்து வலது கையால் அருள்பாலிக்கிறார். இந்த பெருமாளை சிற்ப சாஸ்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பு உள்ள முறைப்படி, உளி கொண்டு செதுக்காமல் கல்லையே கொண்டு செதுக்கி வடிவமைத்து உள்ளார்கள். பெருமாளை செல்வத்துக்கு அதிபதியாக காட்டுவதுண்டு. ஆனால், இத்தல பெருமாள் கல்வி, செல்வம் இரண்டிற்குமே அதிபதியாக உள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும், காளமேகப்புலவரும் இவரை வணங்கி தங்களது புலமை மேலும் சிறக்குமாறு வழிபட்டு சென்றுள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. இவர்கள் தவிர தமிழ்சங்க புலவர்களில் ஒருவரான வேம்பத்தூர் குமரனார் அகநானூறில் 157வது பாடலையும்,புறநானூறில் 317வது பாடலையும், தமிழ்சங்க புலவர்களில் மற்றொருவரான வேம்பத்தூர் கண்ணன் கூத்தனார் குறுந்தொகையில் 362வது பாடலையும், சுந்தராஜ பெருமாளை வழிபட்டு பாடியுள்ளார்கள். பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கவிராஜ பண்டிதர் இந்த பெருமாளை வழிபட்டு ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலஹரி மற்றும் ஆனந்த லஹரியை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அத்துடன் இவர் மானாமதுரை ஆனந்தநாயகி மாலையும், வேம்பத்தூர் வாராஹியின் மேல் புவனாம்பிகை கலை ஞான தீபமும், மேல கொடுமனூர் முருகன் மீது ஞான உலாவும் பாடியுள்ளார். வேம்பத்தூர் பெருமாளின் கருணையால் கவிராஜபண்டிதர் பெற்ற கவித்திறமையை அறிந்த மதுரை மீனாட்சி, பண்டிதர் காசி சென்ற போது அவருக்கு மகளாக இருந்து சேவை புரிந்திருக்கிறாள். மதுரை மீனாட்சியே சேவை செய்யும் அளவுக்கு புலமைதரக்கூடிய வள்ளல் தான் வேம்பத்தூர் பெருமாள். அத்துடன் 16ம் நூற்றாண்டு கவிகாலருத்ரர், 17ம் நூற்றாண்டு வீரை ஆளவந்தார் மாதவபட்டர், வீரை அம்பிகாபதி, 18ம் நூற்றாண்டு கவிக்குஞ்சரபாரதி, 19ம் நூற்றாண்டு கவிசங்கர சுப்பு சாஸ்திரிகள், கவி சங்கரநாராயணய்யர், உ.வே. சாமிநாதய்யர், சிலேடைப்புலி பிச்சுவய்யர் ஆகியோர் இத்தல பெருமாளின் அருளால் பெரும் புலவர்களாக திகழ்ந்தனர்.
கூப்பிட்டு அருள்பவர்: ஆகூய் வரதராக பெருமாள் கருவறையில் வீற்றிருக்கிறார். ஆகூய் வரதர் என்றால் இடக்கையால் வா என்று அழைத்து வலக்கையால் அருள்பாலிப்பவர் என்று பொருள். இடதுகை விரல்களை வளைத்து, அருகில் நம்மை அழைத்து, வலக்கையால் அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேல் இருகைகளும் சங்கு, சக்கரத்தைத் தாங்கி நிற்கின்றன. திருமகள் பெருமாளின் மார்பில் குடி கொண்டிருக்கிறாள். பூமிதேவியும், நீளாதேவியும் இருபுறத்திலும் உடன் காட்சி தருகின்றனர்.
விண்ணகரக் கோயில்: திருமாலுக்குரிய 108 திவ்யதேசங்களில் வைகுண்டத்தை இப்பூவுலகில் காணமுடியாது. ஆனால், வேம்பத்தூர் சுந்தரராஜப்பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலத்திற்கு விண்ணகரம் என்றும் பெயருண்டு. கல்வெட்டுகளில் இத்தலம் புறவரி விண்ணகரம், ராஜேந்திர விண்ணகரம், ஸ்ரீவிஜய மாணிக்க விண்ணகரம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
மாலையில் மந்திரவிபூதி: இங்கு தினமும் சுதர்சன சக்கரத்தை விபூதியில் இட்டு விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜெபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் இந்த விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய்நொடிகளைப் போக்கும் மருந்தாக இதனைப் பூசிக் கொள்கின்றனர். அரியும் சிவனும் ஒன்றே என்ற அடிப்படையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.
பூமியில் கிடைத்த பூவராகர்: இங்குள்ள பூவராகப்பெருமாள் திருப்பணிவேலையின் போது, பூமிக்கடியில் கிடைக்கப்பெற்றார். பூமாதேவியை மடியில் ஏந்திய இவரது திருமுகம் தேவியை நோக்கி உள்ளது. சர்க்கரைப் பொங்கலும், கோரைக்கிழங்கு நைவேத்யமும் ரேவதி நட்சத்திரத்தில் நைவேத்யம் செய்யப்படுகிறது. பக்தர்கள், இவரிடம் தங்கள் குறையை ஒரு தாளில் எழுதி விண்ணப்பிக்கின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை அதைக் கோயிலில் பாதுகாக்கின்றனர். குறை நிவர்த்தியானதும், பூவராகருக்கு பூச்சொரிந்தோ (உதிரிப்பூக்களை கொட்டுவது), பூப்பந்தல் இட்டோ நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
கல்வியருளும் ஹயக்ரீவர்: கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். சரஸ்வதிதேவியின் குருவான இவரை வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இவருக்கு வியாழக்கிழமை தேன் அபிஷேகமும், ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவதும் சிறப்பாகும். கல்வியில் முன்னேற்றம் பெற நெய்தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்குகின்றனர். பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிஆகியோரும் வீற்றிருக்கின்றனர். கருடாழ்வார் கைகூப்பிய படி மூலவர் எதிரே காட்சிதருகிறார்.
தல வரலாறு:
கவிகால ருத்ரர் என்ற புலவர் திருமால் பக்தராக விளங்கினார். பெருமாள் அவரது கனவில் தோன்றி, அடியெடுத்துக் கொடுத்து பாடும்படி அருள்புரிந்தார். புலவர் பெருமாளிடம், அவ்விடத்தில் தங்கும்படி வேண்டிக்கொண்டார். பெருமாளும் அங்கே தங்கினார். பாண்டிய மன்னன் ஜடாவர்ம குலசேகரன் கோயில் நிர்மாணித்தான். சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. காலவெள்ளத்தில் கோயில் சிதிலமடைந்தது. பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது.
ஒரு முறை இப்பகுதியை ஆண்ட மன்னனின் மனைவிக்கு முதுகில் ராஜபிளவை என்ற கொடிய நோய் ஏற்பட்டது. மன்னன் பல வைத்தியர்கள் மூலம் குணப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதையறிந்த இங்கு வசித்த வேதமூர்த்தி அவர்கள் மன்னரிடம் சென்று தான் இந்த நோயை குணப்படுத்துவதாக கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், அப்படி குணமாகி விட்டால் இந்த கிராமம் முழுவதையும் பரிசாக அளிப்பதாக கூறினான். அத்துடன் அந்த பரிசை பெற 2008 அந்தணர்கள் நேரில் வர வேண்டும் என்ற நிபந்தனை விதித்தான். ஆனால் இங்கு 2007 அந்தணர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களுக்கு உதவ இங்குள்ள குளக்கரையில் அமர்ந்திருக்கும் விநாயகர் 2008வது அந்தணராக மாறி இவர்களுடன் சேர்ந்து இக்கிராமத்தை பரிசாக பெற்றனர். இதனால் கோபமடைந்த மன்னன் மனைவியின் தம்பி நோயை குணப்படுத்தி விட்டு செல்லும் வழியில் வேதமூர்த்தியை விரட்டி வெட்டினான். அப்பொழுது வேதமூர்த்தி உயிருடன் மண்ணில் பாய்ந்து விட்டார். இதனால் வேதமூர்த்தி அவர்களின் காலை மட்டும் வைத்து வேம்பத்தூர் அருகில் உள்ள வயல் வெளி நடுவில் கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.