Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 59 · 118 / 159

நாயகி மீனாட்சி

உலகில் எத்தனையோ நாடுகளும், இனங்களும் இருந்தாலும், அதில் பழமையும், பெருமையும் மிக்கது பாரத நாடும், தமிழினமுமே. தமிழகத்தை ஆட்சி செய்த சேரர், சோழர், பாண்டிய மூவேந்தருள் தொன்மையான அரச குடியாகவும் பாண்டியர் குலமே திகழ்கிறது. ‘பாண்டிய நாடே பழம்பதி’ என மாணிக்கவாசகர் இதை கூறுகிறார். பாண்டியர்களுக்கு பல சிறப்புகள் இருப்பினும் அவற்றுள் முத்தாய்ப்பான மணி மகுடம் போல் திகழ்பவர்கள் மீனாட்சியம்மனும், அவளை கரம் பிடித்த சொக்கநாதப் பெருமானுமே. இந்த பிரபஞ்சத்தை இயக்கும் ஆதிபராசக்தி தான் ஒரு மானிட பெண்ணாக பூமியில் அவதரித்தாலும் அவள் தடாதகை என்ற திருநாமம் கொண்டு அவதரித்த மதுரை திருத்தலம் சிறப்பானது. அரசு, ஆன்மிகம், தமிழ், பண்பாடு, கலாசாரம், தொன்மை, வரலாற்று சிறப்பு, வீரம் முதல் விருந்து வரை மதுரை நகரில் இல்லாதது எதுவும் இல்லை. அம்பிகை ஒரு பெண் இளவரசியாக யாகத்தீயிலே அவதரித்து அவனி(உலகம்) ஆளும் பேரரசியாக முடி சூடி தேவர்கள் முதல் சகலரையும் வென்றும் ஈசனின் மனதையும் வென்றும் அவள் பாதம் பதிய நடந்த ஊர் மதுரை. சிவபெருமானும் சுயம்பு லிங்கமாக, மாப்பிள்ளையாக, அரசராக, விறகு சுமப்பவராக, போர் வீரராக, வளையல் வியாபாரியாக, கூலித்தொழிலாளியாக, எல்லாம் வல்ல சித்தராக, சாட்சிசொல்பவராக, குதிரை வியாபாரியாக, பாடகராக என பல வடிவங்களில் வந்து தன் பாதங்களால் புனிதப்படுத்தியது தலம் மதுரை. திருமாலும், பிரம்மனும் காண முடியாத ஈசனின் அடியையும் முடியையும் கண்டது இந்த மதுரை மண் தான். ஆம்! இதே மண்ணில் தான் ஈசன் தன் பாதங்கள் பதிய நடக்கிறார், இதே மண்ணை தான் தன் தலையிலும் சுமக்கிறார். இப்படியாக பல சிறப்புக்களைப் பெற்ற நகரம் மதுரை. முன் தோன்றிய மூத்த சுயம்பு லிங்கமாக சொக்கநாதர் திகழ்வதும், 64 திருவிளையாடல்கள் நிகழ்த்தி சங்கம் வைத்து தமிழ் வளர்க்க காரணமாகவும், எம்பெருமான் தானே புலவராக வந்த பெருமையும் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒரே தலத்தில் சிவபெருமானும் அம்பிகையும் சுயம்புவாய் எழுந்தருளி ஜாதி, மத பேதம் கடந்து மக்கள் மனதில் ஆட்சி புரிகின்றனர் என்றால் அது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மட்டுமே! உலகின் முதல் சுயம்பு லிங்கமான மதுரை சொக்கலிங்கத்தை போற்றுகிறது ஹாலாஸ்ய மகாத்மியம். அப்பர் பாடிய தேவாரத்திலும் கூட ‘முளைத்தானே எல்லோர்க்கும் முன்னே தோன்றி’ என இத்தலத்திலுள்ள சிவனை முதலில் தோன்றிய சுயம்பு மூர்த்தி எனப் பாடுகிறார். அனைத்து கலைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரே சமஷ்டி லிங்கமாக மதுரை சொக்கலிங்கரே திகழ்கிறார். சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகப் பாசுரத்தில் ‘ஆலவாயில் மன்னிய சிவன்யான்’ எனமதுரையில் நிலைத்திருக்கக் கூடியவன் நான் என்று தானே கைப்பட எழுதியுள்ளார். போகர் சித்தர் எழுதிய ‘சப்த காண்டம்’ எனப்படும் போகர் 7000 நூலில், தான் கயிலையில் சிவபெருமானிடம் அவர் விரும்பி உறையும் தலம் எது எனக் கேட்ட போது சிவபெருமானே மதுரையை சொன்னதாக ‘மகாதேவர் மதுரையைத் தான் மகத்தான தலம் என்று மதிப்பிட்டாரே’ என குறிப்பிடுகிறார். இப்படியாக ஆறு ஆதார தலங்கள், அதற்கும் மேலான சகஸ்ராரத்தின் தலமான கயிலாயத்துக்கும் மேலான துவாத சாந்தத்தின் தலமாக மதுரை திகழ்கிறது. மதுரை கோயிலிலேயே வரகுண பாண்டிய மன்னருக்கு சிவபெருமான் கயிலை காட்சியைத் தருகிறார். அனைத்து சிவாலய மூர்த்திகளும் பள்ளியறை பூஜையில் மதுரை சொக்கநாதருள் அடங்குவதாக ஐதீகம். அதே போல எல்லா பழங்கால சிவாலயங்களிலும் பள்ளியறை மூர்த்தியின் பெயர் ‘சொக்கர்’ என அழைக்கப்படுவது இதற்கு சான்று. எனில் மதுரை சொக்கநாதப் பெருமானை வணங்கினாலே கயிலாயம் உள்ளிட்ட எல்லா தலங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். ‘அளவில்லாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனை தென்கூடல் திருஆலவாய் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே’ என பல ஊழிக் காலத்தைக் கண்டும் நிலைத்திருக்கும் மதுரை சொக்கநாதரின் திருவடிகளை போற்றுகிறது தேவாரம். இதன் மூலமாக இத்தல சிவபெருமானின் பெருமையை அறிய முடியும். அம்பிகையின் கோயில்களை பட்டியல் இட்டால் முதலில் தொடங்குவதே மதுரை மீனாட்சி தான்! தடாதகை என்ற நாமம் தரித்து யாகத்தீயில் இருந்து உதித்து இங்கு அவதரிப்பதற்கு முன்பே இங்கே சக்தி பீடம் இருந்தது. அதையே தன் முற்பிறவியில் வழிபட்டு தவம் செய்த கந்தர்வப் பெண்ணான வித்யாவதி மறுபிறவியில் காஞ்சனமாலை என்ற பெயரில், பாண்டிய அரசியாகவும், தடாதகையின் தாயாகவும் திகழ்ந்தார். எனில் மீனாட்சி இங்கு அவதரிப்பதற்கு முன்பே இங்கே சிவமும் சக்தியும் சுயம்புவாக தோன்றி விட்டதை உறுதியாக அறியலாம்! தடாதகை என்ற பெயரில் அம்பிகை அவதரித்து, தவழ்ந்து, விளையாடி மகிழ்ந்து, அரசியாக பட்டம் தரித்து, போர் புரிந்து சிவனை கரம் பற்றி, அரசாட்சி செய்து பின்னர் தானே மரகத திருமேனியாய் நின்றருளும் ஒரே திருத்தலம் இந்த கடம்பவனமான மதுரை. சக்தி பீடங்களில் சிறந்த ‘மனோன்மணி பீடம்’ என்றும் ‘கடம்பவன பீடம்’ என இத்தலம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் மட்டுமே மீனாட்சியிடம் இருந்து ஒவ்வொரு கால பூஜையிலும் ‘ஸ்ரீவித்யை’ எனப்படும் உபாசனை மார்க்கத்தில் கூறியுள்ள ஆதிபராசக்தியின் உயரிய வடிவங்களின் ஆற்றல் வெளிப்படுகிறது. அவை, திருவனந்தல் – மகாஷோடசி; விளாபூஜை – பாலாம்பிகை; காலசந்தி – புவனேஸ்வரி; திரிகாலசந்தி – கவுரி; உச்சிக்காலம் – சியாமளை; சாயரட்சை – மாதங்கி; அர்த்தஜாமம் – பஞ்சதசாக்ஷரி; பள்ளியறை பூஜை – ஷோடசி. சங்கப் புலவர்கள், அம்பிகை உபாசகர்கள், ஆதிசங்கரர், அகத்தியர் முதலான முனிவர்கள் அனைவரும் அன்னை மீனாட்சியை போற்றியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் ‘நாமகளும் மாமகளும் மாமகிடன் செற்றுகந்த கோமகளைத் தான்படைத்த கொற்றத்தாள்’ என கலைமகளான சரஸ்வதி, அலைமகளான மகாலட்சுமி, மகிஷாசுரன் தலை கொய்த துர்க்கை ஆகியோரை படைத்த ஆதிபராசக்தி என ‘மதுராபதி தெய்வம்’ எனக் குறிப்பிட்டு மீனாட்சியை போற்றுகிறார் இளங்கோவடிகள். மீனாட்சி தன்னிகரற்ற கருணாகரி! தன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரருக்கு நேரில் வந்து முத்துமாலை பரிசு தந்தது, தன் மீது கீர்த்தனைகள் பாடிய சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு முக்தி தந்தது, ‘மீனாட்சி கலிவெண்பா’ பாடிய சிதம்பரம் சுவாமிகளுக்கு காட்சி தந்து வேல் தந்து இன்று திருப்போரூர் முருகன் கோயிலை மீட்டுருவாக்கம் செய்தது முதல் மதுரை கோயில் வடக்கு கோபுரத்தை முழுமையாக கட்டி முடித்த நாகப்பன் செட்டியாருக்கு நேரில் காட்சி தந்து அர்த்தஜாம பிரசாதத்தை தந்தது வரை என மீனாட்சியம்மன் நிகழ்த்திய அற்புதங்களை பட்டியலில் அடக்க முடியாது! இவ்வளவு ஏன் முகலாயர்களும் ஒரு காலகட்டத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அடிபணிந்து ‘முகலாய கிரீடம்’ காணிக்கை தந்துள்ளனர். ஆங்கிலேய கலெக்டர் ரோஸ் பீட்டர் காணிக்கை செலுத்திய, ரத்தினங்கள் இழைத்த தங்க பாத அங்கவடிகளும் இன்றும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட பெரும் மதிப்பு மிக்க பொருட்களில் சகல மரியாதையுடன் மீண்டும் இந்தியாவிற்கு பிரிட்டன் பேரரசே அனுப்பி வைத்தது மதுரை மீனாட்சி அம்மனின் நீலநாயகப் பதக்கம் மட்டுமே. அதற்கு பிராயச்சித்தம் வேண்டி இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தங்க காசுமாலையை மீனாட்சி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார். இப்படியாக இந்நாட்டை ஆண்ட பண்டைய மன்னர்களும்; முகலாயர்களும்; சூரிய அஸ்தமனமே கண்டிராத அப்போதைய பிரிட்டானிய பேரரசும் அடிபணிந்து வணங்கியது மதுரை நாயகி மீனாட்சியை மட்டுமே! இப்படியாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பெருமை அளவிடற்கரியது. அம்மையும் அப்பனும் விரும்பி உறையும் தன்னிகரற்ற தலமான மதுரையை நாம் போற்றி வணங்குவோம்.

— வி.நவீன் ஸ்ரீதர், 87787 08223

Advertisement
Top
Advertisement