மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2026 01:11
மதுரை:மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று கோவிலில் கார்த்திகை உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பிரியா விடையுடன் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளியதையடுத்து நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியதையடுத்து தினமும் காலை மாலை வேளைகளில் மீனாட்சிஅம்மன் மற்றும் சுந்தரேசுவரர், பிரியா விடையுடன் பஞ்சமூர்த்திகள் ஆடி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். வருகிற 24-ந்தேதி திருக்கார்த்திகை தீப விழா அன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதி உள்ளிட்ட கோவில் வளாகத்தில் லட்சத்தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, அன்று இரவு சன்னதி தேரடி அருகே உள்ள பூக்கடைதெருவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.