Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 64 · 137 / 159

திருவிளையாடல் புராணம்

மதுரை நகரில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதரின் திரு விளையாடலை செந்தமிழில் அருளிச் செய்துள்ளார் பரஞ்ஜோதி முனிவர். இவர் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர். சமஸ்கிருதம், தமிழில் புலமை வாய்ந்தவர். நுண்ணறிவும் நூலறிவும் படைத்தவர். சிவபத்தியும் செந்தமிழ்க் கவிபாடும் திறனும் உடையவர். இவர் பிறவிக் கடலைக் கடப்பதற்கு நன்னெறி காட்டும் ஞான ஆசிரியரை நாடிச் சிவத் தலங்களைத் தரிசித்து வந்தார். ஒரு நாள் சிவராஜதானியாக விளங்கும் மதுரை மாநகரை அடைந்தார். இந்நகரில் சிலநாள் தங்கி அங்கயற் கண்ணியையும் ஆலவாயண்ணலையும் வழிபட்டு வந்தார். அப்படி வரும் போது மாமுனிவர் ஒருவரை தரிசித்தார். அவரிடம் உபதேசம் பெற்று துறவு பூண்டார். இவரது மொழிப் புலமையையும் வாக்கு நலத்தையும் கண்டு உணர்ந்த மதுரை மாநகரப் மக்கள் பலர் அவரைக் கண்டு அடிபணிந்தனர். சமஸ்கிருதத்தில் ஹாலாசிய மான்மியத்தைத் தமிழில் பாடித் தருமாறு வேண்டினர். இவரும் அன்பர்களின் கருத்தை நிறைவேற்றும் பொருட்டு ஆலவாயண்ணலின் அனுமதிக்காக இறைஞ்சி நின்றார். ஒருநாள் துயில் கொள்ளும்போது அங்கயற்கண்ணம்மை இவரது கனவில் தோன்றி, “நம் பெருமான் திருவிளையாடலைப் பாடுவாயாக!” என்று பணித்து மறைந்தருளினார். உடனே பரஞ்ஜோதியாரும் விழித்தெழுந்து மீனாட்சியம்மையின் திருவருளைச் சிந்தித்து வியந்தார். அவர் கட்டளைப்படியே ‘சத்தியாய்’ என்ற மங்கலச் சொல்லால் தொடங்கிக் சோமசுந்தரப்பெருமான் நிகழ்த்தியருளிய 64 திருவிளையாடல் களையும் திருவிளையாடல் புராணமாகத் தெய்வ மணம் கமழும் பாடல்களாக இயற்றினார். மேலும் இவர் திருவிளையாடற் புராணத்தின் சாரமாக ‘மதுரை 64 திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா’, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி’ என்ற இருநூற்களையும் பாடியருளினார்.

Advertisement
Top
Advertisement