Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 64 · 136 / 159

ககோளம்

மீனாட்சியம்மன் கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் ஊரில் பாலாறு, தேனாறு ஓடுகிறதா என்று மேடைகளில் பேசி கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்தநீர்கடல் ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம். சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.,) பரப்பளவு கொண்டது. அதைச் சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணங்களில் உலகத்தை பாதுகாப்பதற்காக தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்த விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர் உலகை இந்த ஓவியத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஓவியத்தில் அசுவினி, பரணி, கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவதவீதி, ஆர்ஷவீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி, விசாகம், கேட்டை, அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்

இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பல வகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேதத்தில் இருந்து தெரிய வருகிறது. பாற்கடல், எண்ணெய்க்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமியதீவு, காந்தர்வதீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை இந்த ஓவியத்தில் பார்க்கலாம்.

Advertisement
Top
Advertisement