அமர்ந்த கோலம்: அன்னை ஆதிபராசக்தியின் சிலை மூன்றடி உயரம் உள்ளது. தாமரை பீடத்தில் வலதுகாலை மடக்கியும், இடது காலை ஊன்றியும் அமர்ந்திருக்கிறாள். இடக்காலை ஊன்றியிருப்பதன் மூலம் அனைத்திலும் முதன்மை தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதும் உணர்த்தப்படுகிறது. அவள் தனது வலது கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்திருயிருக்கிறாள். பொதுவாக அம்மாள் சிலைகளுக்கு நான்கு, எட்டு என கரங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் அம்பாளுக்கு இரண்டு கரங்களே உண்டு. அதுபோல மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியும் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை பராசக்தி மானிட வடிவத்தில்அருள் பாலித்த இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கரங்களுடன் படைப்பது வழக்கம் இவளுடைய ஞானவடிவான கூந்தல் மேலே தூக்கி முடிந்த நிலையில் இருக்கிறது.
தாமரை பீடம்: அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், இருதய கமலம். நெஞ்சத்தாமரை என்று கூறப்படுவது போல உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதை உணர்த்துகிறது. தாமரை மலரின் புற இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன. அக இதழ்கள் மேல்நோக்கி உள்ளன. நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அக மனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு, அமிழ்ந்து கீழ்நோக்கி இருக்கிறது. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ்நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது. அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்துவிடாமல் அவர்களை காக்க அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்துகொள்ளலாம் . தனது இடது திருவடியை ஊன்றியிருப்பதன் மூலம் தனக்கு மேற்பட்டவர்கள்யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்: பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோயிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோயிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர்.மாத விலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அது பற்றியும் பெரிதுபடுத்தி பேசவேண்டியதில்லை என்று பங்காரு அடிகளார் கூறியிருக்கிறார். |