அர்ஜுனன் சிவ அஸ்திரம் பெற தவம் இருந்த தலங்களில் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில்,
ஆனூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91 95510 66441, 98417 16694
பொது தகவல்:
கிழக்குப் பார்த்த திருக்கோயில். கோயிலின் முன் அழகிய திருக்குளம். ஒரு திருச்சுற்று. திருக்கோயிலின் முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளது. கருவறை தேவ கோட்டங்களில் யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை வடிவங்களைத் தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டிகேசுவரர் வடிவம் மிகவும் தொன்மை சிறப்புடையது. ஆலயத்தின் சுவரில் விநாயகர், ஜேஷ்டாதேவி சிற்பங்கள் புதைத்து வைத்து கட்டப்பட்டுள்ளன. தொன்மையான சிறப்பு வாய்ந்த இக்கோயில், காலந்தோறும் பல மாற்றங்கள் அடைந்ததை இவை எடுத்துக்காட்டுகின்றன.
பிரார்த்தனை
வழக்கு விவகாரங்கள் நீங்கவும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் வாழவும் இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆனூர். இன்று ஆனூர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்ததைக் காண்கிறோம். பிற்கால பல்லவர், சோழ மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்து வந்த தகவல்களைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் ஆனூர் ஆகிய சத்தியாசிரய குல கால சதுர்வேதி மங்கலம் என்ற இவ்வூர் சிறப்புப் பெற்று விளங்கியிருக்கிறது. ஆனூரில் வேத பாடசாலை செயல்பட்டு வந்து, அதில் மாணவர்கள் பயின்று வேத சாஸ்திரங்களில் தேர்ந்து விளங்கி இருக்கிறார்கள் என்கிற அரிய செய்தியையும் காண முடிகிறது. சிவன் கோயில் திருவம்பங்காட்டு மகாதேவர் என்றும், பெருமாள் கோயில் சித்திரமேழி விண்ணகர் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பல்லவ மன்னன் கம்ப வர்மன், பராந்தக சோழன், ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன் ஆகிய மன்னர்கள் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில்லைப் போற்றி, வழிபாட்டுக்கு தானம் அளித்த செய்திகளைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. ஆனூர் ஆளும் கணம் - அதாவது கிராம நிர்வாக சபையின் உறுப்பினராக இருந்த ஸ்ரீதர கிரமவித்தன் என்பவன், இக்கோயிலில் விளக்கெரிக்க தானம் அளித்திருக்கின்றனர். ஆனியூர் மகா சபையினர் ராஜராஜ சோழன் காலத்தில் அந்தணர் ஒருவருக்கு, பட்ட விருத்தியாக நிலம் அளித்தனர். அவர் சாம வேதத்தில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இக்கோயிலில் நான்கு மாணவர்களுக்கு வியாகரணம், இலக்கணம் முதலிய பாடங்களை சொல்லித் தர வேண்டும் எனவும், மாணவர்களுக்கு நாள்தோறும் உணவும் வழங்க வேண்டும் எனக் கல்வெட்டு குறிக்கிறது. நிலவருவாயிலிருந்து இக்கோயிலில் கல்விப்பணி நடைபெற்றதையும் அறிகிறோம்.
தல வரலாறு:
அர்ஜுனனுக்கு சிவன் அஸ்திரம் கொடுத்தது இங்கேதான் என்கிற ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தக் கிராமத்தின் அருகே இருக்கின்ற ஒரு மலையை அஸ்திர மலை என்றே குறிப்பிடுகிறார்கள். அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் வந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அர்ஜுனன் சிவ அஸ்திரம் பெற தவம் இருந்த தலங்களில் இதுவும் ஒன்று.