கைகூப்பிய குரு: இது ஒரு குரு ஸ்தலம். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும்.
எமதர்ம ஈஸ்வரர்: காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில் எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. எமதர்ம ஈஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும்.
பெரியவர் வழிபட்ட சிவன்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி ஸித்தி பெற்றார். இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார். |