மூலவருக்கு தலையில் வெட்டியது போன்று வடு அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
அப்பரசம்பேட்டை.
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 4367-364279, 9865015839
பொது தகவல்:
கோயில் நுழைவு வாயிலில் கொடிமரத்திற்கான பீடமும், அதன் முன் பலி பீடம் அதற்கு முன் நந்தி இடது பக்கம் சாய்ந்த நிலையில் மேற்கு பக்கம் சிவனை பார்த்த வண்ணம் படுத்துள்ளது. கோயிலின் உள்ளே ஆங்கார நந்தியும், இடபக்கம் விநாயகர், வலப்பக்கம் பாலமுருகன் அமைந்துள்ளது, கர்ப்பகிரகத்தின் தெற்கு, மேற்கு, வடக்கு பாகங்களில் கீழ்ப்பகுதியில் கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. கர்ப்பகிரகத்தின் உள்ளே ஆபத்சகாயேஸ்வரர் தலையில் வெடியது போன்று வடு காணப்படுகிறது. கோயிலில் அகிலாண்டேஸ்வரி அபய முத்திரையுடன், கருணை விழிகளுடன்,கோவை சிரிப்புடன் காட்சியளிக்கிறார். காலபைரவர் அன்னை யின் அருகில் வெளி மண்டபத்திலும், காவல் பணியில் சண்டிகேஸ்வரும், உலகம் உய்யவும், உயிர்கள் வாழவும் ஓயா.., தியானத்தில் தென் திசையில் தெட்சிணாமூர்த்தியும் அவர் அருகில் தூய எண்ணம்,சொல், செயல்களுடன் இருபக்கமும் ஏகாந்தவாசியான முனிவர்கள் அமர்ந்திருப்பது சிறப்பாக உள்ளது.
பிரார்த்தனை
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சுட்ட செங்கல், பட்டையாக இருப்பதால் (நாயக்கர் காலம் என தெரிகிறது). சுமார் ஐந்து ஏக்கர் பரப்பில் 3 அடி அகலம்,12 அடி உயரத்தில் கோட்டை மதிற்சுவர் மலையைப் போல் உயர்ந்துள்ளது. 9,555 சதுர அடியில் கோயில் செவ்வக வடிவில்,கோபுரம் சிறிய அளவில் தஞ்சை பெரியக்கோயிலை போன்று இருந்தாலும் சிற்பங்கள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணையும், மண்ணையும் ஒன்று சேர்க்க ஏற்பட்ட தோற்றம் போல் நேர்த்தியான தோற்றத்துடன் எழில் கொஞ்சும் அண்ணாமலையார் மேற்கு பக்கம் பார்த்த வகையில் காட்சி அளிக்கிறார். சிவனின் திருமுடிக்காண அன்ன பட்சியாய் உருமாறி பறந்து சென்று திரு முடி காணமுடியாது திரும்பிய, படைத்தல் கடவுளான பிரம்மன், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த தண்ணீர் வெளியேற்றும் மாடத்தின் மேல் அலங்கார ஆடை, ஆபரணங்களுடன் கண் கவரும் வண்ணத்திலும், எங்கெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அங்கெல்லாம் உருவமாய், அருவமாய், ஒளியாய், காற்றாய், புயலாய் உருவெடுத்து அதர்மத்தின் அடிச்சுவடே இல்லாமல் ஊழித்தாண்டவம் புரியும் துர்க்கை அன்னை ஆங்கார சொருபீனி யாய், அழகு பதுமையாய் வடக்குத் திசையில் அருள்பாலிக்கின்றனர். கோவைச்சிரிப்பும், குங்கும இதழும், குறும்புப்புன்னகையும் கொண்ட பாலமுருகன் கிழக்குத்திசை நோக்கி அருள்பாலிப்பது சிறப்பாக உள்ளது. சிவனுக்கு உகந்த அரசமரமும் கோயிலுக்கும் முன் ஐந்து ஏக்கர் பரப்பில் படர்ந்த அழகிய குளம் உள்ளது.
தல வரலாறு:
கி.பி., 500 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் தஞ்சாவூர், மன்னார்குடி பகுதியில் பெருவணிகர் ஒருவர் வாணிகம் மேற்கொண்டு கையில் பொருள் செல்வங்களுடன் நடந்து சென்றுள்ளார். இரவு நேரமான போது அந்த வணிகரை கள்வர்கள் பலர் துரத்திச்சென்று அவரிடம் இருந்த பொருட்களை களவாட முயன்றனர். பல்வேறுப்பகுதியில் ஒளிந்தும் அவரை கள்வர்கள் துரத்தினர். தப்பமுடியாத நிலையில் அந்த வணிகர் வயல்கள் சூழ்ந்த பகுதியில் நடுவில் இருந்த காட்டில் ஓடி ஒளிந்தார். அங்கும் கள்வர்கள் துரத்திச்சென்றனர் அப்போது அங்கிருந்த சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து காப்பாற்றுமாறு கதறினார். அந்த நேரத்தில் வணிகரை கள்வர்கள் அரிவாளால் வெட்டினர். அந்த வெட்டை சிவன் தன் தலையில் வாங்கி வணிகரை காத்தார். மயங்கிய நிலையில் கிடந்த வணிகர் இச்சம்பவம் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் தன்னை கொல்ல வந்தர்களிடம் வெட்டுப் பட்டு தன்னை காத்ததை கண்டு மனம், ததும்பி, வெதும்பி, உள்ளம் நடுங்கினார். பின்னர் அங்கிருந்த சிவன் ஆபத்தை காத்த ஈஸ்வரர் என அழைத்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த செல்வங்களை கொண்டு தஞ்சை பெரியக் கோயில் போன்ற கோபுர வடிவில் கோயில் எழுப்பியுள்ளார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவருக்கு தலையில் வெட்டியது போன்று வடு அமைந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே 10 கி.மீ., தொலைவில் உள்ளது அப்பரசம்பேட்டை கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல மன்னார்குடி பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் செருமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி உள்ளே 2 கி.மீ., தொலைவில் செல்ல வேண்டும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5