|
மலரை அர்ச்சித்து பக்தர்கள் ஈசனை வணங்குவார்கள். ஆனால் 63 நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார் கல்லை வீசி அர்ச்சித்து ஈசனை வணங்கினார். மழலைகளிடம் அடி வாங்கி பெருமிதம் கொண்ட தாய்மார்களைப் போல், கல்லை வீசிய நாயனாருக்கும் கனிவு காட்டி முக்தியடைய வைத்தார் ஈசன். இந்த வரலாற்றை வெளிப்படுத்துகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர், ஈஸ்வரனைப் பரிசோதிக்க நினைத்தார். அவரிடம் ஒரு குளிகை இருந்தது. அதை எந்தப் பொருளின் மீது வைத்தாலும், அந்தப் பொருள் நீராகி விடும். கொங்கணர், அந்தக் குளிகையை வீரட்டானேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து லிங்க பாணத்தின் மீது வைத்தார். லிங்கம், குளிகையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது. மெய்சிலிர்த்த கொங்கணர் அங்கேயே அமர்ந்து இசனை வழிபட்டு, பல சித்திகள் பெற்றார்.
இந்த வீரட்டானேஸ்வரர் மீதுதான் கல்லை வீசினார் சாக்கிய நாயனார். இவர் காஞ்சி அருகிலுள்ள திருச்சங்கமங்கை என்ற ஊரில் பிறந்தவர். இளைஞனாக வளர வளர ஒரு ஞானத் தேடல் இவரை ஆக்ரமித்தது. ஊர் ஊராக அலைந்தார். காஞ்சிபுரத்தில் அப்போது கொடிகட்டிப் பறந்த பவுத்த சமயத்தில் இணைந்தார். பவுத்தத்துக்குத் தமிழில் சாக்கியம் என்று பெயர். பவுத்தத்தில் இணைந்து காவி கட்டினாலும் மனம் என்னவோ, இது நமக்கு ஏற்ற இடம் தானே? என்ற கேள்வியை எழுப்பியவாறே இருந்தது. கால் போன போக்கில் நடந்தவர். கடுமையான ஒரு கோடை மதியத்தில் வீரட்டானேஸ்வரர் பிரதிஷ்டை ஆகியிருந்த இடத்துக்கு வந்தார். லிங்கத்துக்கு எதிரில் அமர்ந்தார். அருகில் புஷ்பம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தார். கிடைக்கவில்லை. நிறைய கற்கள் பக்கத்தில் இருந்தன. ஒரு கல்லை எடுத்தார் லிங்கத்தின் மீது எறிந்தார். ஞானத் தேடல் என்ற நோக்கில் அலையடித்துக் கொண்டிருந்த மனத்தில் ஏதோ அமைதி ஏற்பட்டது போல இருந்தது. அதன்பின் அங்கு வந்து தினசரி லிங்கத்தின் மேல் கல்லெறிவது அவர் வழக்கமாயிற்று. ஒவ்வொரு முறை கல் எறிந்தபோதும், ஒரு பூரணத்துவ நிலைக்கு தான் உயர்வதை அவரால் உணர முடிந்தது. ஒருநாள் ஏதோ அசதியில் சாப்பிட அமர்ந்தவருக்கு, அட, இன்று சுவாமிக்கு கல் அர்ச்சனை செய்யவில்லையே என்று தோன்றியது. அங்கே ஈசனும் என்ன இது! நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. நமது பக்தனைக் காணோமே! என்று காத்துக் கொண்டிருந்தார்.
ஓடோடி வந்த சாக்கியர், கல்லை லிங்கத்தின் மீது வீசிவிட்டு, ஸ்வாமி! மன்னிக்கணும் நேரமாகிவிட்டது என்றார். அவருடைய பக்தியில் உருகிப்போன ஈசன், அம்பாளுடன் காட்சியளித்து அவருக்கு முக்தியை அளித்தார். |
|