மொட்டைக் கோபுரத்துடன் விளங்குகிறது கோயில் பத்து கோயில். கோயிலினுள் நுழைந்தால், கோயிலின் புதுப்பொலிவும், தூய்மையும் பரவசப்படுத்தும். கிழக்குப் பார்த்த கோயில். முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பு. மூலவர், லிங்கத் திருமேனியராக அலங்காரத்துடன் அம்சமாக தரிசனமளிக்கிறார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் அழகு, மனதைக் கொள்ளை கொள்ளும். புன்னகை மிளிர அபய, வரத ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறாள் தேவி. பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி- தெய்வானையுடன் முருகன், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகம விதிப்படி அமைந்துள்ளன. இத்தலத்தில்தான் மகாவிஷ்ணு மீண்டும் லட்சுமியை அடைந்தார் என்கிற ஜாதகத்தின் அடிப்படையில் கோயிலின் உள் பிராகாரத்தில் கஜ லட்சுமியை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பிரார்த்தனை
மண வாழ்க்கை சிறக்கவும், தம்பதிகளுக்குள் மன வேற்றுமை மறையவும் கைலாசநாதர்- தர்மாம்பிகையை தரிசிப்பதால் வாழ்வில் குறைகள் தீருவதால் பக்தர்கள் வருகின்றனர்.
தலபெருமை:
திருமாலும் மகாலட்சுமியும் மீண்டும் சேர்ந்த தலம் என்பதால், தம்பதிகளுக்கு இடையில் பிணக்கு, மனக்கசப்பு, பிரிவு போன்ற பிரச்னைகள் இருந்தால், இத்தலத்தில் வந்து கைலாசநாதரையும் தர்மாம்பிகையையும் பிரார்த்தித்துக் கொண்டால், பிரச்னைகள் மறைந்து, மீண்டும் மகிழ்வான வாழ்க்கை தொடரும் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் சூரியர், சந்திரர், பைரவர், சனீஸ்வரர், தேவசேனாபதி உள்ளிட்டோர் எழுந்தருளியுள்ளனர். அவரவர் பெயர்கள் பக்தர்களுக்கு விளங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.
தல வரலாறு:
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விரிவுபடுத்தப்பட்டு, பின்னர் போதுமான பராமரிப்பு இன்றி பாழடைந்துபோய் விட்டது. சமீபத்தில் மத்திய அரசின் தொல்பொருள் துறை இக்கோயிலை இனங்கண்டு, பெரிய அளவில் புனருத்தாரணம் செய்து, இன்று கம்பீரமாகவும் ஒளிமயமாகவும் திகழ்கிறது. ஒரு சமயம் மகாவிஷ்ணுவுக்கும் மகாலட்சுமிக்கும் பிணக்கு ஏற்பட, அவள் கோபம் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள். அவளைக் காணாமல் வருந்திய பெருமாள், லட்சுமியை மீண்டும் சேர வேண்டி, இத்தலத்துக்கு அருகில் உள்ள நாராயண மங்கலம் என்ற தலத்தில் தவம் மேற்கொண்டார். உன் மனைவி லட்சுமி மயில் உரு எடுத்து, ஒரு வனத்தில் உள்ளாள். உன் ஞான திருஷ்டியால் அவள் இருக்குமிடத்தை நீயே அறிந்து கொள்வாய் என்று அருளினார் சிவன். தவத்தின் இறுதியில், மகாலட்சுமி மயில் உருவில் இருக்கும் இடத்தை விஷ்ணு உணர்ந்தார். அந்த ஊர், அருகில் உள்ள அரி விழி மங்கலம். வடமொழியில் இதற்கு ஹரிநேத்ரபுரம் என்று பெயர். திருமாலின் மனக்கண் லட்சுமி இருக்குமிடத்தைக் கண்டதால் இந்தப் பெயர். லட்சுமி மயில் உருவில் ஆடிக்கொண்டிருந்த காட்சியை அவர் கண்டார். லட்சுமி நடனமாடிய அந்தத் தலமே அருகிலுள்ள திருடச்சேரி. அதாவது, திருநடனச்சேரி என்பதே பின்னர் திருவிடச்சேரி என மருவிற்றது. (இப்போதும் இவ்விடத்தில் நிறைய மயில்கள் வயல் பகுதிகளில் மேய்கின்றன.) மயிலாக இருந்த திருமகளை, திருமால் மயில் போலவே கூவி அழைத்தார். அது கூவிப்பற்று என்றாகி, அதுவே தற்காலத்தில் கோயில் பத்து என்றழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில்தான் மகாவிஷ்ணு மீண்டும் லட்சுமியை அடைந்தார் என்கிற ஜாதகத்தின் அடிப்படையில் கோயிலின் உள் பிராகாரத்தில் கஜ லட்சுமியை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இருப்பிடம் : திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து திருவாஞ்சியம் வழியாக நன்னிலம் செல்லும் பஸ்மார்க்கத்தில்,6 கி.மீ துாரத்தில் உள்ளது.கோவிலுக்கு செல்ல கோவில்பத்து பள்ளிக்கூட பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020