பதிவு செய்த நாள்
16
நவ
2019
01:11
பல்லடம்:பயன்பாடின்றி கிடக்கும் கோவில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நொச்சிபாளையம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பகுதியில், கருப்பராயன் கோவிலுக்கு சொந்தமான, 9.5 ஏக்கர் நிலம் உள்ளது. சமூக விரோதிகளின் பிடியில் உள்ள அந்த இடத்தை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கடந்த சில தினங்களுக்கு முன், கமிஷனர் அலுவலகம் அமைப்பதற்காக, ஆய்வுகள் நடந்தன. இருந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், நிலம் பயன்படாமல் உள்ளது. சமூக விரோதிகள் சிலர், காலி இடத்தில், மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வேலியும் சேதமடைந்ததால், காலி இடம் திறந்தவெளியில் உள்ளது. அதனால் காலப்போக்கில், ஆக்கிரமிப்புகளின் பிடியில் சென்று விடும் அபாயமும் உள்ளது.பல ஆண்டுகளாக, பாதுகாக்கப்பட்டு வந்த இடம், சமூக விரோதிகளின் பிடியிலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் மாயகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இடத்தை, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.