பதிவு செய்த நாள்
17
ஏப்
2012
10:04
ஈரோடு : ஈரோடு மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா இன்று நடக்கிறது. ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா 13ம் தேதி துவங்கியது. 14ம் தேதி சிறப்பு கட்டமுதுத்திருநாளும், அன்று காலை 6 மணிக்கு சிவபெருமான் எழுந்தருளி, அப்பரடிகளுக்கும், அடியார்களுக்கும் கட்டமுது வழங்குதல், பஞ்சமூர்த்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்தி எழுந்தருளி, கட்டமுது வழங்கல், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. ஏப்., 15ம் தேதி காலை 7 மணிக்கு அம்பலவாணர் திருமுழுக்கு வழிபாடு, அப்பர் தில்லை திருநடனக் காட்சி கண்டு பதிகம் பாடல், சந்திரசேகரர் புறப்பாடு, கயிலை வாகனக் காட்சி நடந்தது. நேற்று, அப்பருக்கு பஞ்சநதியில் திருக்கயிலைக் காட்சி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மகிமாலீஸ்வரர், மங்களாம்பிகை திருக்கல்யாணம், இந்திர விமானத்தில் திருமணக்கோலத்தில் வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். துணை மேயர் பழனிசாமி, மண்டலத்தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இரவு 10 மணிக்கு திருமுறை வாணர்களின் பதடிகச் செஞ்சொல் பாமாலை வழிபாடு, பொற்கிழி, பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, மூவர் தேவாரத் தமிழசை விழா, 22ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் தனபால் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் ரவி, திருத்தேர் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.