சிவகிரி: தேவிபட்டணம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா 3 நாட்கள் நடந்தது. தேவிபட்டணம் மாரியம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி பொங்கல் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக தட்டாங்குளம் மாரியம்மன் கோயில் சென்று அம்மனுக்கு பட்டுகட்டி விழா துவங்கியது. இரவு 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இரவு 12 மணிக்கு அலங்கார சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. கிராமிய நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அக்னிசட்டி ஊர்வலமும், இரவு 9 மணிக்கு கரகாட்டமும் நடந்தது. இரவு 12 மணிக்கு பெரிய சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. மூன்றாம் நாள் பெண்கள் முளைப்பாரி எடுத்து தட்டாங்குளம் காளியம்மன் கோயில் சென்று குளத்தில் கரைத்தனர். தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைவர் டாக்டர் என்.ஆர்.தங்கபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரவு 12 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை தலைவர் தங்கமலை, துணைத் தலைவர் கருப்பசாமி, செயலாளர் நடராஜன், துணை செயலாளர் தங்கராஜ், பொருளாளர் ராஜதுரை உட்பட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.