1924 ஜூலை மாதம் காஞ்சி மகாசுவாமிகள் தியாகராஜர் அவதரித்த திருவையாற்றில் முகாமிட்டு, காவிரியின் வடகரையில் உள்ள புஷ்ய மண்டபத்துறை மண்டபத்தில் தினமும் பூஜை நடத்தினார். ஆடிப் பெருக்கு நாளில் திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டது. சுவாமிகள் இருந்த பூஜா மண்டபத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கலக்கம் அடைந்த பக்தர்கள் பூஜை செய்ய வேறிடம் செல்லலாம் என சுவாமிகளிடம் வேண்டினர். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. சாதுர்மாஸ்ய காலம் என்பதால் பூஜையை இடம் மாற்ற முடியாது என்றும், விரதம் முடியும் வரை அங்கேயே தங்க இருப்பதாகவும் தெரிவித்தார். தண்ணீர் வரத்து அதிக மானதால் காவிரியின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசைகள் மூழ்கின. உடமை களை இழந்த ஏழைகள், மேடான பகுதி யிலுள்ள மரத் தடிகளில் தங்க ஆரம்பித்தனர். அவர்களின் பரிதாப நிலை கண்ட சுவாமிகள் வருந்தினார். உடனடியாக ஸ்ரீமடத்தில் உணவு தயாரித்து அன்னதானம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சேவை நடந்தது.
அதன்பின் சாதுர்மாஸ்ய விரதம் முடிந்து வல்லம் என்ற ஊருக்கு விஜயம் செய்தார் சுவாமிகள். அப்பகுதியில் எச்.எம்.ஹீட் என்ற ஆங்கிலேயர் கலெக்டராகப் பணிபுரிந்தார். அவர் திருவையாற்றில் நடந்த அன்னதானம் பற்றிக் கேள்விப்பட்டு சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். மனிதாபிமானத் துடன் நடத்திய தொண்டினைப் பாராட்டி, அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார். நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார். சமுதாய உணர்வுடன் செயல்படும் இந்த புனிதத் துறவியை சந்தித்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். திருப்பூர் கிருஷ்ணன்